ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது.
அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு.
ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற கருத்துக்கு ஆணித்தரமாக ஆதாரம் தருவது போல உள்ளது இந்த கசிவுகள்.
என்ன அது விக்கிலீக்ஸ்?
2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.
சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதாரதளமாக விக்கிலீக்ஸ் மாறி வருகிறது. மேலும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.
இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மூலம் பெற்று சேகரித்தது.
அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது விக்கிலீக்ஸ்.
அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.
கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ்.
பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற பெருமையும் இதற்குண்டு.
ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.
இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.
இந்தியாவைப் பற்றி...
இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.
இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற "தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்தியா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு முயன்று வருகிறது. இதனால் அதன் செயல்பாடுகள் குறித்துஅறிய இந்தியத் தூதர்களை உளவு பார்க்குமாறு ஹில்லாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூலை 31ம்தேதி ஹில்லாரி அமெரிக்கத் தூதர்களுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹில்லாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர் ஒதுக்கியுள்ளார்.
இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹில்லாரி.
இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா.
மேலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு, ஜி77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது.
உலகத் தலைவர்களை கேவலமாக கிண்டலடித்த அமெரிக்கா
பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது 'பெரியண்ணன்' அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். "பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.
இதுதவிர பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் ஒழுங்கீனமான செயல்பாடுகளை தினந்தோறும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாஷிங்டனுக்கு அனுப்பி வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
"லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்...", என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, "இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்.." என்றும் கூறியுள்ளனர்.
'டாக் புடின்'
மேலும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுக்கு, 'அல்பா டாக்' என்ற நாயின் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக குறிப்பிட்டு, மாஸ்கோவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் தகவல்கள் பரிமாறிக் கொண்டது தெரிய வந்துள்ளது.
அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.
ஈரான் ஹிட்லர்
ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை "ஹிட்லர்" என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.
பாகிஸ்தானிடம் தோற்ற அமெரிக்கா...
2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.
உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.
சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?
அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.
அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.
மேலும் சீனாவுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட தென் கொரியா மேற்கொண்ட முயற்சிகளை, அமெரிக்க உளவுத் துறை தடுத்து நிறுத்தியது பற்றிய தகவல்களும் அதில் வெளியிட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆப்கானிஸ்தான் துணை பிரதமர் சவூதி விமான நிலைத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புடைய அமெரிக்க டாலருடன் பிடிபட்டதும், பின்னர் அமெரிக்கா தலையிட்டு அந்த விவகாரத்தை தீர்த்து வைத்ததும் விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.
கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா...
இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்திருப்பதாக சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் 'விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.
அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்!
No comments:
Post a Comment