டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்கும், அவருடன் பேச்சு நடத்துவதற்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம்மோத்தி ரோமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளையும், பாதுகாப்பு தொடர்பான தொடர்புகளையும் விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறைவையும், நல்லுறவையும் மேலும் வலுப்படுத்த இந்தப் பயணம் உதவும் என்ற நம்பிக்கை அதிபரிடம் உள்ளது.
இரு நாடுகளும் இணைந்து உலக அரங்கில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த பேச்சுக்களும் இடம் பெறவுள்ளன. சில முக்கியப் பிரச்சினைகளில் இரு நாடுகளும் இணைந்து மேலும் நெருக்கமாக செயல்பட வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது.
அதிபரின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியமானது. மிகவும் அற்புதமான ஒன்றாகவும் இது அமையும் என்றார் ரோமர்.
முன்னதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார் ரோமர்.
No comments:
Post a Comment