வாஷிங்டன்: பாகிஸ்தானின் அணு ஆயுதத்திட்டத்தை முடக்க முயன்று அமெரிக்கா தோல்வி அடைந்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா தொடர்பான பல்வேறு ராணுவ மற்றும் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விக்கிலீக்ஸ்.இந்த நிலையில் பாகிஸ்தான், சீனா, சவூதி அரேபியா, ரஷ்யா, ஜெர்மனி தொடர்பான பல முக்கிய தகவல்களை அது வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம்:
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தை முடக்க முயன்று அமெரிக்கா அதில் தோல்வி அடைந்ததாக ஒரு தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறுகையில், அவர்கள் வருவது பாகிஸ்தானிய மீடியாக்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி தடுத்து விட்டனர்.
உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டனவாம்.
கூகுளை ஹேக் செய்ய உத்தரவிட்ட சீனா:
இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் புகுந்து அவற்றை செயலிழக்க வைக்க சீனாவின் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உத்தரவிட்டதாக இன்னொரு செய்தியை விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவன கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் புகுந்து அவற்றை செயலிழக்க முயற்சித்தது சீனா. சீன அரசுடன் ஒத்துப் போக கூகுள் முன்வராததால் ஆத்திரத்தில் இதை செய்தது சீனா. இதற்காக ஹேக் செய்வதில் நிபுணர்களான தனியார்கள், அரசு அமைப்புகள் என பலரையும் பணியர்த்தியது சீன அரசு.
மேலும் அமெரிக்க அரசின் சில இணையதளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002ம் ஆண்டு முதல் ஊடுறுவி வந்துள்ளது சீன அரசு.
ஈரானை தாக்கக் கோரிய சவூதி அரேபியா:
அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்துள்ள சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.
அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்க நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறதாம்.
பாகிஸ்தானுடன் நட்புடன் இருப்பது போல காட்டிக் கொள்ளும் சவூதி அரேபிய அரசு சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். இதுகுறித்து சவூதி மன்னர் கூறுகையில், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும் என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.
'நிர்வாண ராஜா' சர்கோஸி!:
இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.
Read: In English
ஈரான்அதிபர் அகமதிநிஜாத்தை அமெரிக்க தரப்பு ஹிட்லர் என்ற பெயரில் வர்ணித்து வருவதாகவும், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை ஆல்பா டாக் என்று வர்ணிப்பதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதேபோல பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா, வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பெயரிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment