30 November 2010

ஊழலை ஒழிக்க தொலைபேசி சேவை.

அகமதாபாத்: நாட்டை ஊழல் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கையில் இந்த நேரத்தில் அதை ஒழிக்கவும், குறைக்கவும் தொலைபேசி சேவையுடன் கிளம்பியுள்ளனர் அகமதாபாத் ஐஐஎம் மாணவர்கள்.
Corruption
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் இந்தியாவின் தற்போதைய நிலை. அன்மையில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்துவிட்டது. தற்போது 2 ஜி ஊழல் விவகாரம். இன்னும் எத்தனை ஊழல் வெளிச்சத்திற்கு வரவிருக்கின்றதோ தெரியவில்லை.

இந்நிலையில் ஐஐஎம்- அகமதாபாத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் ஊழல் என்னும் பெருங்குற்றத்தைக் குறைத்தால் தான் நாடு முன்னேறும் என்று எண்ணி தொலைபேசிச் சேவையை துவங்கவுள்ளனர். இந்த சேவை மூலம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் ஐஐஎம்-அகமதாபாத் பேராசிரியர் அனில் குப்தா ஆகியோரைத் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.

இது குறித்து பேராசிரியர் அனில் குப்தா தெரிவித்ததாவது,

மாணவர்கள் ஊழலைக் குறைக்க தொலைபேசிச் சேவையை துவக்கும் திட்டத்துடன் என்னை அனுகியபோது இது ஒரு சிறந்த திட்டம் என்று நினைத்தேன். தற்போது நாடு இருக்கும் நிலையில் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. லஞ்சம் கொடுக்காமல் இந்தியாவில் எந்த வேலையும் நடக்காது என்றே மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்று ஒரே ஊழல் விவகாரங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஊழல் நடப்பது தெரிந்தாலும் மக்களுக்கு அதை யாரிடம் சொல்வது என்பது தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் புகார் கொடுத்தால் அவர்கள் வேலை கெட்டுவிடுமோ என்ற பயம்.

இந்த சேவை மூலம் மக்கள் தைரியமாக ஊழல் பற்றி புகார் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் புகார்கள் உண்மையானதா என்று கண்டிறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

No comments: