சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது. தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று இரவு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த அரசுதான் இந்தியாவிலேயே முதல்முறையாக 1990-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. தற்போது, 14 லட்சத்து 67 ஆயிரம் மின்சார மோட்டார்களை சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவது என்றும், இந்த ஆண்டில் 2 லட்சம் மின்சார மோட்டார்களை இலவசமாக அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இலவசமாக வழங்கப்பட உள்ள மின்சார மோட்டார்களில் மீட்டர் பொருத்தப்பட போவதாகவும், இதன்மூலம் இலவச மின்சாரத்தை ரத்து செய்யப் போவதாகவும், ஒருசில எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு விவசாயிகளை திசைதிருப்புவதற்காகவும், இலவச மின்சார மோட்டார் திட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காவும், தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். இதை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை எக்காரணம் கொண்டும் இந்த அரசு ரத்து செய்யாது என்று பலமுறை அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த விளக்கத்தையே மீண்டும் இதன்மூலம் அரசு உறுதி செய்கிறது.
மேலும், தற்போது வழங்கப்பட உள்ள இலவச மின்சார மோட்டார்களில் மீட்டர் பொருத்தப்பட மாட்டாது. எனவே, தமிழக விவசாயிகள் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment