தங்கத்தில் கூண்டு செய்து, விதவிதமாய் உணவு கொடுத்தாலும் பறவைகளின் ஆசை, சிறகு விரித்து பறப்பதில் தான் இருக்கிறது. குழந்தைகளும் பறவைகள் போலத் தான். விடுமுறை என்றால், சிட்டுக்குருவிகளின் சலசலப்பாய், சிறுவர், சிறுமிகள் ஆரவாரக் கூச்சலிடுவர். யாராவது "அவுட்' ஆகி விட்டால், ஒரே ஆர்ப்பாட்ட கத்தல் தான். விடுமுறையில் அவர்களுக்கு வானம் தான் எல்லை. சோறுண்ண மறந்து, ஓடியாடி களைத்து போவது வரை, அவர்களின் சந்தோஷம் தீராது. இது ஒரு கனாக்காலம் ஆகிவிட்டது. இப்போதோ விடுமுறை என்றால், வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
கூடி சந்தோஷப்பட வேண்டிய சிறுவர் கூட்டமெல்லாம், வீட்டுச் சிறைகளில் கம்ப்யூட்டர், வீடியோகேம்ஸ், "டிவி' முன் "தனிமை' தவத்தில் மூழ்கிவிட்டனர். சோம்பலாய் ஓரிடத்தில் அமர்ந்து, மூளைக்கு மட்டும் அதிக வேலை கொடுக்கும் இந்த விளையாட்டுகள், இளையோர் பாதையை திசைமாற்றி விட்டன. வளர்ந்தபின், மற்றவர்களோடு இணைந்து பணியாற்றாமல் தடுமாற வைக்கிறது. கூடி விளையாடும் போது, மற்றவர்களோடு இணைந்து பணியாற்றும் பக்குவத்தைப் பெறமுடியும். வயதொத்த பிள்ளைகளுடன் விளையாடும் போது இருக்கும் ஆர்வம், சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது.
பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட, பெற்றோர் அனுமதிப்பதில்லை. நம்மைப் போல மற்றவர்களும் நினைப்பதால், பிள்ளைகள் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலையாவதும் இல்லை. தனிமையில் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு, தாழ்வு மனப்பான்மை, எதையும் எதிர்கொள்ளும் திறன், தோல்வி கண்டு பயம், மற்றவர்களுடன் சகஜமாக பழகத் தெரியாமல் தவிர்க்கும் போது, தான் விளையாட்டின் அருமையை உணர முடியும். பாடியும், ஆடியும், ஓடியும், கூடியும் விளையாடும் பழைய விளையாட்டுகளை நினைவுபடுத்துகிறோம். பெற்றோர்களே... நீங்கள் விளையாடியதை நினைவில் வைத்து, உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். நாளைய சமுதாயத்தோடு, உங்கள் குழந்தைகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்யுங்கள்.
பாண்டி: ஒரு காலை தரையில் ஊன்றி, மறு காலை மடக்கி மூன்று கட்டங்களை தாண்டிச் செல்ல வேண்டும். மடக்கிய காலை கட்டத்தில் ஊன்றி விட்டால், "அவுட்'. பெண் குழந்தைகள் விரும்பும் விளையாட்டு இது. ஒரு குடம் தண்ணீர் எடுத்து பூப்பூத்துச்சாம்... என பாடிக்கொண்டே விளையாடுவது இது. இரண்டு சிறுமிகள் எதிரெதிராக நின்று கைகளை உயர்த்தி பிடித்துக் கொள்ள வேண்டும். மற்ற சிறுமிகள் ஒருவர் தோள் மீது மற்றவர் கைவைத்து, கை வளையத்துக்குள் சுற்றி வரவேண்டும். "பத்து குடம் தண்ணீர் எடுத்து பத்து பூ பூத்துச்சாம்' என்று பாடி முடிக்கும் போது, உயர்த்திய கைவளையத்தில் இரண்டு சிறுமிகளை சிறை பிடிக்க வேண்டும்.
குலை, குலையா முந்திரிக்கா: தற்போது "மியூசிக்கல் சேர்' என சிறுவர், சிறுமிகளால் விளையாடப்படுகிறது. பழைய விளையாட்டில், சிறுவர், சிறுமிகள் தரையில் வட்டமாக அமர்ந்து கொள்வார்கள். ஒரு சிறுமியின் கையில் டவல் வைத்துக் கொண்டு, வட்டத்தை சுற்றிக் கொண்டே "கொல கொலயா முந்திரிக்கா' என பாடத் துவங்கி, பாட்டை முடிக்கும் போது கையில் உள்ள டவலை, அமர்ந்திருப்பவர் மீது எறிய வேண்டும். சிறுவர்கள் மட்டுமே விளையாடும் கிட்டி புல் ஆட்டம் தான் தற்போது கிரிக்கெட்டாக வீதிதோறும் அரங்கேறியுள்ளது. கிராமப்புறங்களில் மட்டும் அரிதாக கிட்டிபுல் விளையாடுகின்றனர். சிறுவர்களின் வலிமையை நிரூபிக்கும் விளையாட்டு இது. ஒருவரை குனியச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தை அதிகப்படுத்தி தாண்டுவது பச்சை குதிரை தாண்டுதல்.
கண்ணாமூச்சி ரே...ரே...: பாடிக் கொண்டே, சிறுவர், சிறுமிகள் சேர்ந்து விளையாடும் மற்றொரு விளையாட்டு இது. ஒருவரின் கண்களை கட்டிவிட வேண்டும். மற்றவர்கள் ஒளிந்து கொள்வார்கள். தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம் காலாட்டு மணி... கையாட்டு மணி... குழந்தைகள் காலைநீட்டி எதிரெதிரே அமர்ந்து விளையாடுவது. இதெல்லாம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் வேலைசெய்யும் உன்னத விளையாட்டுகள். இன்றைய பெற்றோர், நேற்றைய சிறுவர், சிறுமிகளாக இருந்த போது, மணலில் உருண்டும், ரோட்டில் ஓடியாடி விளையாடியவர்கள் தான். நாம் பெற்ற இன்பம், நமது குழந்தையும் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை உணர்ந்து, வெளியில் விளையாட அனுமதியுங்கள். அனைவரும் பங்கேற்கும் விளையாட்டில் தான் அன்பு, கோபம், "கா' விடுதல், "பழம்' விடுதல் எல்லாம் இருக்கும். பறவையின் உணர்வை, குழந்தைகளும் அனுபவிக்கட்டும்.
No comments:
Post a Comment