வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, பல இடங்களில் 4,000, 5,000 ரூபாய் என கொடுத்து பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்கள், தேர்வு நடக்குமா, நடக்காதா என தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), கடந்த ஜூலை 21ம் தேதி 2,653 வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்கள்) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு விளம்பர அறிவிப்பை வெளியிட்டது. இந்த பதவிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால், அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்வர் என கருதி, 13 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் டி.என்.பி.எஸ்.சி., விற்பனை செய்தது. கடைசி தேதியான ஆகஸ்ட் 20ம் தேதி வரை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர்.விண்ணப்பித்த கையோடு, எப்படியாவது வி.ஏ.ஓ.,வாகி விட வேண்டும் என்ற கனவுடன், பல்வேறு பயிற்சி நிலையங்களில் 4,000, 5,000 ரூபாய் கொடுத்து பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, தேர்வு தேதி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்வு எப்போது நடக்கும் என்றே தெரியாத நிலை இருக்கிறது. டிசம்பர் மாதம் தேர்வு நடக்கும் என்றும், இல்லை... இல்லை... சட்டசபை தேர்தலுக்குப் பிறகே தேர்வு நடக்கும் என்றும் பேச்சு அடிபட்டு வருகிறது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறுகையில், "10 லட்சத்து ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை அனைத்தையும் பிரித்து, பதிவேட்டில் பதிவு செய்து, தற்போது விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்ததும், தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் குறித்த விவரம் தெரிய வரும். அதன் பிறகே, தேர்வு தேதி குறித்து ஆலோசிக்கப்படும். டிசம்பர் இறுதியில் தேர்வு நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன' என்று தெரிவித்தனர்.
டிசம்பருக்குள் தேர்வுகள் நடக்காமல், மேலும் தள்ளிப்போக நேரிட்டால், பயிற்சி நிலையங்கள் கூடுதல் கட்டணம் கேட்க திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே பல ஆயிரம் ரூபாயை கொடுத்தவர்கள், தேர்வு தள்ளிப்போனால் மேலும் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கவலைப்படுகின்றனர். தேர்வு குறித்த தகவல் அறிவதற்காக, தினமும் ஏராளமான இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு வந்து செல்வதும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, வி.ஏ.ஓ., தேர்வை மையமாக வைத்து, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இதனால், தேர்வு நேர்மையான முறையில் நடக்குமா என்றும், விண்ணப்பித்தவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது
No comments:
Post a Comment