25 October 2010

பெங்களூரில் கழுதைப் பாலுக்கு கிராக்கி-1 லிட்டர் ரூ. 200!

பெங்களூர்: பெங்களூரில் கழுதைப் பாலுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ. 200 முதல் 400 வரை விற்கப்படுகிறதாம்.

கழுதைப் பால் குழந்தைகளுக்கு நல்லது என்ற எண்பது மக்களின் பொதுவான எண்ணம். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் நோய்களை கழுதைப் பால் குணப்படுத்துகிறது என்றுமக்கள் நம்புகிறார்கள். இதில் பாதியை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதாவது கழுதைப் பாலில் புரதச் சத்து அதிகம் உள்ளது என்பதை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதேசமயம், அதன் மருத்துவப் பயன் குறித்து டாக்டர்கள் இதுவரை முழு அளவில் ஒப்புக்கொள்ளவில்லை.

இப்படி இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் கழுதைப் பால்மோகம் மக்களிடையே குறையவில்லை. கம்ப்யூட்டர் நகரான பெங்களூரில் இந்த கழுதைப் பால் பிசினஸ் அமோகமாக நடக்கிறதாம்.

இதை பலர் தொழிலாகவே செய்துவருகின்றனர். புட்டராஜ் என்பவர் கூறுகையில், இது எங்களுக்குப் பரம்பரைத் தொழிலாகும். எனது தாத்தா காலத்திலிருந்தே நாங்கள் கழுதைப் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். நான் மல்லேஸ்வரம் வண்ணார் பகுதியில் நான் முக்கிய பால் சப்ளையராக உள்ளேன். அதுபோல பல்வேறு பால் டீலர்களுக்கு கழுதைகளையும் நான் சப்ளை செய்கிறேன்.

எனக்கு மடிவாளா, தாசரஹள்ளி, எலஹங்கா, சேஷாத்ரிபுரம், ஸ்ரீராமபுரா, ராஜாஜி நகர், கன்டோன்மென்ட் ஆகிய பகுதிகளில் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அதிகாலை ஒரு மணிக்கு சிலர் என்னை போனில் அழைத்து உடனே பால் தேவை என்று கேட்பார்கள். ஒரு முறை ஒரு தம்பதியினர் தங்களது ஒரு வயதுக் குழந்தையுடன் காலை 6 மணிக்கு எனது வீட்டுக்கு வந்து பால் வேண்டும் என்று கேட்டனர். தொடர்ந்து 2 நாட்கள் அவ்வாறு வந்து வாங்கிச் சென்றனர்.

குழந்தைக்கு பசியே எடுக்கவில்லை என்பதால் தினசரி ஐந்து மில்லி பாலைக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டதால் அவர்கள் வந்து சென்றனர். வயிற்று வலி, சளி, இருமல், ஆஸ்துமா, வலிப்பு போன்றவற்றிற்கு கழுதைப் பால் நல்லது என்பது பொதுமக்களின் எண்ணமாகும் என்கிறார் புட்டராஜு.

இவரிடம் 20 கழுதைகள் உள்ளனவாம். சமீபத்தில் கர்னூலிலிருந்து ஒரு வெள்ளைக் கழுதையையும், அதன் 2 மாதக் குட்டியையும் வாங்கி வந்து லிஸ்ட்டில் சேர்த்துள்ளார்.

கழுதைப் பால் அவ்வளவு உயர்ந்ததா என்று பெங்களூர் மாநகராட்சியின் கால்நடைத்துறை இணை இயக்குநர் பர்வேஸ் அகமது பிரானிடம் கேட்டால், கழுதைப் பாலின் மருத்துவ மகிமை குறித்து எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் அதேசமயம், அதில் புரதச் சத்து மிக அதிகம் உள்ளது என்பது உண்மை. நிச்சயம் தாய்ப்பாலுக்கு சமமானது என்று கூட கூறலாம். தாய்ப்பாலுக்கு மாற்றாகக் கூட கொடுக்கலாம் என்றார்.

ஆனால் டாக்டர்கள் இந்தக் கருத்தில் முரண்படுகிறார்கள். இதுகுறித்து லேக்சைட் மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவர் டாக்டர் எச்.பரமேஷ் கூறுகையில், கழுதைப் பாலின் மருத்துவ குணங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம், தாய்ரப்பாலைப் போலவே இதிலும் புரதச் சத்து அதிகம் உள்ளது என்பது உண்மையே என்றார்.

மகப்பேறு மருத்துவர் டாக்டர் மீனாட்சி பரத் என்பவர் கூறுகையில், கழுதைப் பாலில் சக்தி உள்ளது என்தை என்னால் ஏற்க முடியாது. ஒருவேளை அதில் சக்தி இருந்து, மருத்துவ பலன்கள் நிறைய இருந்தால் நகரில் உள்ள அத்தனை குழந்தைகள் நல மருத்துவர்களும் கூடவே ஒரு கழுதையையும் வளர்க்கலாம் அல்லவா? குழந்தைகளுக்கு கழுதைப் பாலை கொடுப்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்றார்.

எது எப்படியோ கழுதைப் பால் பிசினஸ் பெங்களூரை கலக்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை

No comments: