புதுடில்லி : டில்லி காமன்வெல்த் போட்டியில், 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கம் உட்பட 101 பதக்கங்களுடன் இந்தியா 2 வது இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. கடைசி நாளான நேற்று பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் செய்னா நேவலும், இரட்டையர் பிரிவில் ஜுவாலா, அஷ்வினியும் தங்கம் வென்று அசத்தினர்.
டில்லியில் 19 வது காமன்வெல்த் போட்டி நடந்தது. கடைசி நாளான நேற்று பாட்மின்டன் போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் செய்னா நேவல், மலேசியாவின் மியூ வோங்கை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை செய்னா 19-21 என போராடி இழந்தார். இரண்டாவது செட்டில் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் இருவரும் 21 புள்ளிகள் பெற்றன. இதனால் செய்னாவின் வெற்றி கேள்விக்குறியானது. இந்நிலையில், அடுத்த 2 புள்ளிகளை பெற்ற செய்னா 2 வது செட்டை 23-21 என தன்வசப்படுத்தினார்.
செய்னா வெற்றி: மூன்றாவது செட்டின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார் செய்னா. இவரது அதிரடி ஆட்டத்தின் முன், திக்கு முக்காடிப் போனார் மியூ வோங். மூன்றாவது செட்டை 21-13 என செய்னா வென்றார். இறுதியில் 19-21, 23-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற செய்னா, தங்கம் வென்று அசத்தினார்.
இந்திய ஜோடிக்கு வெண்கலம்: நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு 3 வது இடத்துக்கான போட்டியில், இந்தியாவின் பவுலோமி கடாக், மவுமா தாஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் விவியன், கேம்பெல் பெரி ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 11-4, 11-7, 11-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய ஜோடியை வீழ்த்தியது. இவ்வெற்றியின் மூலம் பவுலோமி, மவுமா ஜோடி வெண்கலம் வென்று அசத்தியது.
100 வது பதக்கம்: டில்லி காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் 100 வது பதக்கத்தை பெற்றுத் தந்தார் சரத் கமல். நேற்று நடந்த 3 வது இடத்துக்கான போட்டியில், இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சக வீரர் சவுமியா தீப் ராயை எதிர்கொண்டார். இதில், சரத் 11-8, 11-5, 12-10, 11-9 என்ற செட் கணக்கில் சவுமியா தீப் ராயை வீழ்த்தி வெண்கலம் வென்றார். சரத் கைப்பற்றிய வெண்கலப் பதக்கம், டில்லி காமன்வெல்த் போட்டியில் இந்தியா கைப்பற்றும் 100 வது பதக்கமாக அமைந்தது.
No comments:
Post a Comment