மர்கோவா: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, மைதானம் ஈரமாக இருந்ததால், ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 23 ஆண்டுகளுக்குப் பின், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, கோப்பை கைப்பற்றி அசத்தியது.
இந்திய வந்த ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. கொச்சியில் நடக்க இருந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.நேற்று கோவாவில் உள்ள மர்கோவாவில் மூன்றாவது போட்டி நடக்க இருந்தது. இங்கு கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால், இந்த போட்டியும் நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டது. நேற்று காலையில் நல்ல வெயில் அடித்தது. ஆனாலும் மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் ஈரமாக காணப்பட்டது. ஆங்காங்கே காணப்பட்ட நீரை "சூப்பர் சோப்பர்' இயந்திரம் மூலம் வெளியேற்றினர். பின் காலை 11 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த அம்பயர்கள், மீண்டும் 12.15க்கு சோதனை செய்வதாக தெரிவித்தனர்.
பின் 12.15க்கு மைதானத்தை ஆய்வு செய்த "மேட்ச் ரெப்ரி' கிறிஸ் பிராட் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், போட்டியை கைவிடுவதாக அறிவித்தார். இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.
கோவா, ஜவகர்லால் நேரு மைதானத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டி நடக்க இருந்தது. ஆனால், போட்டி ரத்தாக, அரங்கில் திரண்டிருந்த 27 ஆயிரம் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிக்கப்படும் என்ற கோவா கிரிக்கெட் சங்கத்தின் அறிவிப்பு இவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
புதிய வரலாறு:
இப்போட்டி ரத்தானதை தொடர்ந்து, இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை, 23 ஆண்டுகளுக்குப்பின் 1-0 என கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என வென்றிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை, இந்திய அணி வென்று அசத்துவது இது தான் முதன்முறை.
"ஸ்கிரீன்' சரிந்தது
நேற்று ஜவகர்லால் நேரு மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்த "சைடு ஸ்கிரீன்' சரிந்து விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏற்கனவே மைதானத்தை மழையில் இருந்து பாதுகாக்க உதவும் தார்பாய்கள் போதிய அளவு இல்லை என புகார்கள் எழுந்த நிலையில், "ஸ்கிரீன்' சரிந்தது போட்டி ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment