25 October 2010

மருந்து சோதனைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை அறிந்து கொள்ள புதிய சாப்ட்வேர் !!!


புதுடில்லி : உலக நாடுகள் அனைத்திலும், புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் தன்மை மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக, பொதுமக்கள் அல்லது நோயாளிகள் மீது பரீட்சார்த்த சோதனைகள் மேற்கொள்ளப்படும். பொதுவாக, இந்த சோதனைகள் குறித்த விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்படும். நம் நாட்டிலும் இதுவரை, இந்த சோதனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் போன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. சோதனை முறைகளில் பங்கேற்கும் மக்கள் அல்லது நோயாளிகளுக்கு கூட அதுபற்றிய விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படாது. சோதனை விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், 2009ம் ஆண்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் புதிய இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், மருந்து சோதனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும், அதில் பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் புதிய சாப்ட்வேரை அடுத்த மாதம் அறிமுகப்படுத்துகிறது. இதில், சோதனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள், எந்தெந்த மருத்துவமனைகளில் சோதனை நடக்கிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகள், சோதனைகள் நடத்த முறையாக அனுமதி பெற்று, அதைப் பிற மருத்துவமனைகளுக்கு அதிக விலைக்கு விற்கும் அவலம் இந்தியாவில் உள்ளது. இதை கட்டுப்படுத்தி, மருத்துவத் தொழில் மீது அழுத்தம் தர இந்த முறை உதவும். அதாவது, தனிப்பட்ட டாக்டர் ஒருவர் மேற்கொள்ளும் சோதனைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதோடு, சோதனை நடத்த எந்த மருத்துவமனை அனுமதி பெற்றுள்ளது எனவும் தெரிந்து கொள்ள முடியும்.
சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில், சோதனை முயற்சிகளில் ஏற்படும் 80 சதவீத உயிரிழப்புகள் சோதனை மருந்துகளால் ஏற்படுவதில்லை. சோதனைகளில் பங்கு பெறுபவர் ஏற்கனவே நோய் தாக்கியவராக இருப்பது தான் காரணம் என தெரிய வந்துள்ளது.'புதிய சாப்ட்வேரில், சோதனைகளின் எண்ணிக்கை, நோக்கம் மற்றும் நோயாளிகளின் உடல் நல விவரம், உயிரிழந்த முறைகளையும் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ சோதனை முறைகள் குறித்து பொதுமக்கள் தெளிவு பெற முடியும்' என, மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

No comments: