சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண விவரத்தை இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது தமிழக அரசு.
தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த கட்டண விவரத்தைப் பார்க்கலாம். அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகள் விவரங்களையும் இந்த இணையதளத்தில் பார்க்க முடியும்.
நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும்
இந்தக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகங்களோ, அரசோ வெளியிடவில்லை.
இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் அரசுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் ரூ 10 முதல் 11 ஆயிரம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை தெரிவிக்காத 532 பள்ளிகளும் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்யாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.
No comments:
Post a Comment