ஜே.கிறிஸ்துராஜ், வில்லிவாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: லஞ்ச விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் கருத்து, பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் மனம் நொந்து வெளியிட்ட கருத்து. ஆனால், மத்திய, மாநில அரசுகளில் ஆள்பவர்களுக்கெல்லாம் இதில் எந்த வெட்கமுமில்லை. ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்தை, பொறுப்பானவர்கள், பத்திரிகைகள் இடித்துரைத்தும், கிஞ்சித்தும் அதுபற்றி பொருட்படுத்தாமல், மீண்டும் எவ்வழியில் ஆட்சியை கைப்பற்றலாம் என்பதே கொள்கையாகக் கொண்டு அரசியல்வாதிகள் வாழ்கின்றனர். அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்ற நிலையில், லஞ்ச, ஊழல்களைக் காப்பாற்றும் ஆட்சியாளர்கள் இருப்பதால், அரசு ஊழியர்கள், மிகவும் தைரியமாக லஞ்ச வேட்டை நடத்துகின்றனர். அதிகாரிகள் 137 பேர் மீதுள்ள லஞ்ச வழக்கில், இதுவரை அரசிடமிருந்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு வராததால், பலரும் விடுவிக்கப்பட்டு, பதவியில் அமர்ந்து விட்டனர். இங்கே ஒரு சாரார், காந்தி, காமராஜ், இந்திரா வழி என்று கூறி, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழலை மூடி மறைக்கின்றனர். மற்றொரு சாரார், ஈ.வெ.ரா., வழி, அண்ணாதுரை வழி, எம்.ஜி.ஆர்., வழி என்று கூறி, தினமும் மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், எதிர்ப்பவர்களை காவல் துறை துணை கொண்டு அடக்கும் காரியங்களை செய்து வருகின்றனர். ஊழல் பற்றி ஆதாரங்களுடன் பத்திரிகைகள் எழுதினால் கூட, அதற்கு தர்ம அடி கிடைக்கப் பெறுகிறது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, உழைப்பை விட, ஊதியம் மற்றும் சலுகைகள் அதிகமாக தரப்படுகிறது. அமெரிக்காவில் சமீபத்தில், இரண்டு கவர்னர்கள், ஆறு மேலவை மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கு, ஊழல் குற்றங்களுக்காக, ஆறு முதல் 12 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அது ஜனநாயக நாடு. இங்கேயோ, வெட்கப்பட வேண்டியவர்கள் வெட்கப்படாததால், ஓட்டளித்த நாமே வெட்கப்படுகிறோம்.
குறைக்குமா அரசு! சின்னசாமி, துடியலூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: "தனியார் பஸ் கட்டணத்தில், 50 பைசா உயர்த்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. ஆனால், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், ஏர் பஸ்களுக்கு குறைந்தபட்ச டிக்கெட் ஐந்து ரூபாய் எனவும், சொகுசு பஸ்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ரூபாய் எனவும், சாதா பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் இரண்டு ரூபாய் எனவும், எக்ஸ்பிரஸ் என பலகை மாட்டி, அதிகமாகவும் கட்டணம் வசூல் செய்கிறது. "தமிழகத்தில் தான் பஸ் கட்டணம் குறைவு' என, போக்குவரத்துத் துறை அமைச்சரும், முதல்வரும் கூறுகின்றனர். ஆனால், பொதுமக்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து, ஏர் பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய் என பறைசாற்றிக் கொள்ளும் தமிழக அரசு, ஏர் பஸ், சொகுசு பஸ் கட்டணத்தை குறைக்க முன் வரவேண்டும்.
அதிருப்தி மக்களும் ஓட்டளிக்க வழி: ஜி.எஸ்.ராஜன், வேளச்சேரியிலிருந்து எழுதுகிறார்: "தேர்தலில் ஓட்டளிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்பதை, தேர்தல் கமிஷன் திரும்பத் திருப்பக் கூறி வருகிறது. ஆனால், எந்த வேட்பாளருக்கும், கட்சிக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்ற வகையில், ஓட்டுகளை மறுக்கும் உரிமையான 49(ஓ) பிரிவை மட்டும், பலர் முன்னிலையில் படிவம் பெற்று, பகிரங்கமான முறையில் தெரிவிக்கச் சொல்வது, துளிகூட நியாயமல்ல. ஓட்டளிக்க மறுக்கும் உரிமையை வாக்காளர்கள் ரகசியமாக பதிவு செய்ய, 49(ஓ) பிரிவிற்கான பொத்தானை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலேயே வைக்க, தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்களும், கட்டாயம் ஓட்டு போடுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற ரீதியில், ஓட்டுப் போடுவதை வெறுக்கும் நபர்கள், ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்களின் எண்ணங்களை துணிவுடன் வெளிப்படுத்துவர். மக்கள் விரோத செயல்களை செய்யும் கட்சிகளுக்கு, இது நிச்சயம் கிலியை ஏற்படுத்தும். ஒரு தரப்பு மக்களை மட்டுமே தொடர்ந்து ஏமாற்றி ஓட்டு வாங்கும் போக்கு நிச்சயம் தடுக்கப்படும். ஆட்சிக்கு வருபவர்களும், அனைத்து தரப்பு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவர். வரும் தேர்தலில் இருந்தே இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
வருமுன் காப்போம்! ஜே.இ.ராஜகுமார், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: சமீப காலமாக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், "தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிராக இருந்தால், மீண்டும் புரட்சி வெடிப்பதோடு, மக்கள் ஒவ்வொருவரும், மனித வெடி குண்டுகளாக மாறுவர்' என பேசியுள்ளார். இந்த பேச்சு, ஒற்றுமையை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள் செயலை ஒத்ததாக இருக்கிறது. மேலும், "தனி தெலுங்கானா மாநிலம் அமைந்தால், முஸ்லிம் மக்களுக்கு 12 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் துணை முதல்வர் பதவியுடன், ஐந்து அமைச்சர் பதவிகள் உண்டு' என அறிவித்துள்ளார். தன் சுயநலத்திற்கு, பிற மதத்தினரை தூண்டி விட்டு, தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் செயலும், ஒரு விதத்தில் பயங்கரவாதமே! இப்படி ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அந்தந்த மாநிலங்களில் பிரிவினைகளை தோற்றுவித்து, மாநிலங்களை கூறு போட்டுக் கொண்டே சென்றால், எப்படி மக்களிடையே தேசப்பற்றையும், ஒருமைப்பாட்டையும் நாம் காண முடியும். அன்று மாநிலங்களை மொழி வாரியாக பிரித்ததின் விளைவு, இன்று தேசப்பற்று குறைந்து, மாநில பற்றுதான் உயர்ந்து காணப்படுகிறது. தன் இனம், தன் மக்கள், தன் மொழி என்ற குறுகிய மனப்பான்மையுடன், தொலை நோக்கு பார்வையின்றி, அராஜகம் புரியும் அரசியல் தலைவர்கள், மிகுந்து விட்டனர். இந்தியாவின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ?
ஊழல், லஞ்சத்தில் நாம் முதலிடம்! ப.இளமாறன், பட்டுக்கோட்டை, தஞ்சாவூரிலிருந்து எழுதுகிறார்: பொருளாதார வளர்ச்சியை நோக்கி வேகமாக செல்லும் இரண்டாவது நாடு இந்தியா என்று பெருமையாக கூறி கொண்டாலும், அதற்கு மேலாக, ஊழல், லஞ்சம் பெறுவதில் முதலிடத்திற்கு வந்துவிட்டது. எந்த ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானாலும், லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். வசதி படைத்தவர்களுக்கு, லஞ்சம் கொடுப்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒருவேளை உணவிற்கே வழியின்றி தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் லஞ்சம் கேட்பது எந்த விதத்தில் நியாயம். உடனே தீர்ப்பு வழங்கினால்தான், லஞ்சம், ஊழல் ஒழியும். தத்துவ ஞானி சாக்ரடீஸ் சொன்னது போல, சட்டத்தின் முடிவுகளை நிறைவேற்ற இயலாத ஆட்சி, தூக்கி ஏறியபட வேண்டும்.
கவர்னரா, காங்கிரஸ் தலைவரா? வா.சுந்தரேசன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியைக் கவிழ்க்க, எதிர்க்கட்சிகளான காங்கிரசும், மதச் சார்பற்ற ஜனதா தளமும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கர்நாடக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ள எதிர்க்கட்சிகளை திறம்பட எதிர்கொண்டு, மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டு வந்த அம்மாநில முதல்வருக்கு, புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். பா.ஜ.,வில் பிளவை ஏற்படுத்தி, ஆட்சியைக் கவிழ்ப்பதே அவர்களது திட்டம். நம் நாட்டில், விந்திய மலைக்கு தெற்கே உள்ள நான்கு பெரிய மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், கேரளம் போன்றவற்றில், முதன் முறையாக கர்நாடகாவில் ஆட்சி பீடம் ஏறிய பா.ஜ.,வின் வெற்றி, கர்நாடக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மற்ற மூன்று மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், பெரிய உறுத்தலாகவே இருந்து வருகிறது. ஒரு பெரிய தேசிய கட்சி, தங்களின் பிராந்தியத்தில் கால் பதிப்பதை, தென்மாநிலங்களில் உள்ள கட்சிகள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. அதன் வெளிப்பாடாகவே, கர்நாடக குளறுபடிகள் தென்படுகின்றன. ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை சந்தித்ததில் இருந்து, இந்த கருத்து தெளிவாகிறது. ஏற்கனவே கர்நாடகாவில், காங்கிரஸ், ம.ஜ.த., போன்ற கட்சிகளும், ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற பெரிய கட்சிகளும், தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., போன்றவையும், கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவை என, மொத்தம் ஆறு கட்சிகள், நான்கு பெரிய மாநிலங்களை ஆளும் வாய்ப்பைப் பெற்றிருந்தன. ஆனால், அதற்கு போட்டியாக, இன்னொரு பெரிய கட்சி தங்களின் பிராந்தியத்தில் கால் பதிப்பதை இவர்களால், குறிப்பாக காங்கிரசால் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்பதற்கான சான்றுதான், கர்நாடகாவில் அக்கட்சி நடத்திவரும் சித்து விளையாட்டுகள். ஆனால், இதற்கு கவர்னர் பதவியை பயன்படுத்துவதுதான், மிகவும் ஆதங்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. அம்மாநில கவர்னரின் செயல்பாடுகளை மீடியாக்களில் காணும் போது, அவர், கர்நாடகாவில் பா.ஜ., வளர்ச்சியை தடுக்க, காங்கிரஸ் கட்சித் தலைவரை விட, மிகவும் தீவிரமாக செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சி, கவர்னர் பதவியை எவ்வாறு பயன்படுத்தி வருகிறது என்பது, எல்லா மாநிலங்களில் உள்ள கட்சி தலைவர்களின் மனசாட்சிக்குத் தெரியும். அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு, காங்கிரஸ் கட்சிக்காகவே எழுதி வைக்கப்பட்டது போல இருக்கிறது. கர்நாடக மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிட்ட காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளின் பொறாமையின் வெளிப்பாடுகளை, அம்மாநில மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஈரப்பத நெல் விவசாயிகள் தவிப்பு: க.சோமு, கருங்குழியிலிருந்து எழுதுகிறார்: ஒட்டகத்தின் முதுகில் கணிசமான பாரத்தை ஏற்றி விட்டு, அதில் இருந்து ஒரு துரும்பை எடுத்து வந்து, ஒட்டகத்தின் கண் முன்னால் போட்டால், கனஜோராக தன் பயணத்தை தொடரும் என்று கூறுவர். கணிசமான பாரத்தை, கஷ்டங்களை சுமக்கும் விவசாயிகளுக்கு, அரசு கொள்முதல் விஷயத்தில், நீக்குப் போக்கோடு நடந்து, துரும்பை எடுத்துப் போட வேண்டும். மொத்தம் 20 சதவீத ஈரப்பதம் இருக்கும் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற கொள்கை, நெல் கொள்முதல் விஷயத்தில் கண்டிப்பாக தளர்த்தப்பட வேண்டும். நெல்லைக் காய வைக்கும் களம் இல்லாமல், ஆட்கள் இல்லாமல், விவசாயிகள் மகவும் அவதிப்படுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில், உலர் இயந்திரங்களை அரசு சில லட்சம் செலவில் நிறுவினால், விவசாயிகளிடம் இருந்து எவ்வளவு ஈரப்பதத்திலும் நெல்லைக் கொள்முதல் செய்யலாம். கோதுமை, நெல் போன்றவற்றை நூறு சதவீதம் உலர்த்தி விட்டால், அவை ஆண்டுக்கணக்கில் கெடாமல் இருக்கும். தேசிய அளவில் தானியங்கள், பல ஆயிரம் கோடி மதிப்பில் கெட்டுப் போய் உள்ளன. அதை சுப்ரீம் கோர்ட், ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது. "38 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். அனைவருக்கும் கெட்டுப் போன தானியத்தை கொடுக்க முடியாது' என, பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளார். மேற்கூரை உள்ள குடோன்கள் அமைத்து, உலர் இயந்திரங்களை உபயோகித்து உலர்த்தி தானியங்களை பாதுகாப்பு செய்தால், சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டிய அவசியம் எதிர்காலத்தில் இருக்காது. குடோன் இல்லாத, உலர் இயந்திரம் இல்லாத கொள்முதல் நிலையங்களை திறப் பதும் பலனைத் தராது.
ஏன் இந்த குளறுபடி...: சோ.காளிதாசன், பண்ருட்டியிலிருந்து எழுதுகிறார்: 1970களில், அரசு நிர்வாகத்தில், இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருந்தது. அதன் பிறகு, நிர்வாகத் திறன் சிறுக சிறுக குறைந்து, குளறுபடிகள் ஏற்படலாயின. "டி.ஜி.பி., நியமனத்தில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவில்லை' என, ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு வந்த பின்னரும், "டி.ஜி.பி., நியமனத்தில், சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளை கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றியுள்ளது' என, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாதாரண காவலர் தேர்வுக்கு கூட, பல வழிமுறைகள், விதிமுறைகளை பின்பற்றும் அரசு, மாநில டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய உரிய விதிமுறைகளை பின்பற்றாதது ஆச்சரியமாக உள்ளது. தலைமைச் செயலகத்திலேயே நிர்வாக லட்சணம் இப்படி என்றால், மாவட்ட நிர்வாகத்தில் எவ்வளவு குளறுபடிகளோ! "முறையான தேர்வு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன என்பதை, டி.ஜி.பி., நியமனக் கோப்பு வெளிப்படுத்தவில்லை' என, ஐகோர்ட் தெரிவித்துள்ளதே. இந்த நிலையிலா, தலைமைச் செயலகத்தில் கோப்புகள் உருவாக்கப்படுகின்றன? இதுவா சட்டத்தின் நிர்வாகம்? டி.ஜி.பி., அந்தஸ்த்தில் உள்ள அனைவரையும் பட்டியலிட்டு, அவரவர்களின் நிறை, குறைகளை நன்கு பரிசீலித்து, விருப்பம் கேட்டு பெற்று, பதவி விரும்பாதவர்களை தவிர்த்து, எஞ்சியுள்ளோரின் தகுதி, திறமை, முதுமை அடிப்படையில் தேர்வு செய்திருக்க கூடிய மிகச்சிறிய ஏற்பாடு தான், டி.ஜி.பி., நியமனம். மூவரோ அல்லது ஐவரோ தான் பட்டியலில் இருக்கக்கூடும். ஓரிரு மணி நேர அவகாசத்தில் இவர்களை பரிசீலித்திருக்கலாம். காவலர் பதவிக்கு விண்ணப்பித்த இரண்டு லட்சம் பேரில், முறையான வழிமுறைகளை கடைபிடித்து, 2,000 காவலர்களை தேர்ந்தெடுக்கும்போது, டி.ஜி.பி., தகுதிபெற்ற நான்கைந்து பேரில் ஒருவரை டி.ஜி.பி.,யாக, முறையாக தேர்ந்தெடுக்க இயலவில்லையா? டி.ஜி.பி., நியமனத்தில், அரசின் செயலை, உரிய காரணங்களுடன் ஐகோர்ட் ரத்து செய்த பின்னரும், அரசு ஏன், "சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு' என, அறிக்கை விட வேண்டும்
No comments:
Post a Comment