யாங்கூன்: கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறை, சிறைவாசம் என தொடர்ந்து அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியி இன்று விடுதலை செய்யப்பட்டார்.வீட்டுச் சிறையிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியில் வந்து மக்களைப் பார்த்து வணங்கி கையசைத்தார் ஆங் சான். அவரைக் காண பல்லாயிரக்கானோர் அங்கு கூடியிருந்தனர்.
புன்னகை பூத்தபடி காணப்பட்ட ஆங்சான், தனது வீட்டுச் சுவரின் கேட் வரை வந்து மக்களைப் பார்த்தார். ஆங்சானை பார்த்த சந்தோஷத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் மியான்மர் தேசிய கீதத்தைப் பாடினர்.
பின்னர் அவர்களிடையே பேசிய ஆங்சான் சூகியி, நான் உங்களைப் பார்த்து நீண்ட காலமாகி விட்டது. நிறையப் பேச வேண்டியுள்ளது. நான் பேசுவதை நாங்கள் கேட்க விரும்பினால், நாளை பிற்பகல் 12 மணிக்கு கட்சி (சூகியியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி) அலுவலகத்திற்கு வாருங்கள் என்றார் சூகியி.
65 வயதாகும் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியி, கடந்த 7 வருடங்களாக வீட்டுச் சிறையில் இருந்து வந்தார். ஆனால் கடந்த 21 வருடங்களாக ஜனநாயகம் தழைக்கப் போராடி வரும் சூகியி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறை, சிறை என தொடர்ந்து சிறைவாசத்தை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூகியியை விடுவிக்க தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள் கோரி வந்தன. ஆனால் மியான்மர் ராணுவ அரசு அதை ஏற்கவில்லை. ஆனால் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் விடுதலை செய்யப்படுவார் சூகியி என ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்தனர். இதை உலக நாடுகள் நம்பவில்லை. இந்த நிலையில் தற்போது சூகியி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment