10 November 2010

எங்களுக்கு தீபாவளி - கோவை மக்கள்.

 இன்றுதான் எங்களுக்கு தீபாவளி என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், கூறுகிறார்கள் கோவை மக்கள்.

 முதலில் இந்த என்கவுண்டர் உண்மையா பொய்யா என்பதை ஆராய்வோம்.

அதற்கு முன், இன்று இறந்து போன இந்த மோகன் ராஜ் செய்தது மிக மிக மோசமான குற்றம் என்பதில் சவுக்குக்கு மாறுபட்ட கருத்தை கிடையாது.    அள்ளிக் கொஞ்ச வேண்டிய ஒரு குழந்தையை, இப்படிக் கசக்கிப் போட்ட அந்த இருவர் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்பதில் மாறுபட்ட கருத்தே கிடையாது.

ஆனால் யார் தண்டிப்பது ?   சட்டமா ? நீதிமன்றமா ? அல்லது காக்கிச் சட்டை போட்ட கொலைகாரர்களா என்பதுதான் கேள்வி.

இந்த என்கவுண்டர் தொடர்பாக காவல்துறை சொல்லும் கதை என்ன ? வழக்கில் சம்பந்தப் பட்ட மோகன்ராஜ் மற்றும் மனோகரனை காவல்துறையின் கட்டுப் பாட்டில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் உத்தரவு பெற்று, இருவரும் காவல்துறையின் கட்டுப் பாட்டுக்குள் நேற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை குற்றவாளிகள் இருவரும் குற்றம் புரிந்த இடங்களை அடையாளம் காட்டுவதற்காக காவல்துறையின் வேனில் அழைத்துச் செல்லப் படுகின்றனர்.

அழைத்துச் செல்லப் படும் வழியில், மோகன்ராஜ் அருகில் இருந்த உதவி ஆய்வாளரின் கைத் துப்பாக்கியை எடுத்து வண்டியை ஓட்டிச் சென்ற அண்ணாத் துரை என்ற தலைமைக் காவலரின் நெற்றிப் பொட்டில் வைத்து, வண்டியை நிறுத்தச் சொல்கிறார்.

அவர் வண்டியை நிறுத்த மறுக்கவே, துப்பாக்கியால் சராமாரியாகச் சுட்டதில் உதவி ஆய்வாளர் ஜோதி வயிற்றில் காயம் அடைகிறார். மற்றொரு உதவி ஆய்வாளர் முத்துமலை வலது கையில் காயம் அடைகிறார். உடனே, ஆய்வாளர் அண்ணாத்துரை தனது கைத்துப்பாக்கியை எடுத்து மோகன் ராஜைப் பார்த்து தலையில் சுட்டதில் அவர் இறந்து போகிறார். இதுதான் காவல்துறையினர் விட்ட கதை.


ஒவ்வொரு வரியாக அலசுவோம். நேற்று மதியம் காவல்துறையின் கட்டுப் பாட்டில் எடுக்கப் பட்ட இரு குற்றவாளிகளும் விடியற்காலை இடத்தை அடையாளம் காட்டுவதற்காக ஏன் அழைத்துச் செல்லப் பட வேண்டும் ?

வழக்கமாக பகலில் குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, பத்திரிக்கையாளர்களையும், கேமரா மேன்களையும் அந்த இடத்திற்கு வரவழைத்து, அவர்களிடம் போஸ் கொடுப்பதுதானே சைலேந்திரபாபுவுக்கு வழக்கம். எதற்காக இந்த முறை மட்டும் விடியற்காலை ?
 
(சைலேந்திர பாபு சரியான விளம்பரப் பிரியர்.  இவர் புகழ் பாட, தனியா ஒரு வெப்சைட் வேற.  கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்தில் சொல்வாரே.. நீ வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா... ?  அதுதான் ஞாபகத்துக்கு வருது) 
வேனில் எப்போதுமே குற்றவாளிகள் பின் பக்கம் தானே அமர வைக்கப் பட்டிருப்பார்கள் ? எப்படி ஓட்டுனரின் நெற்றியில் துப்பாக்கியை வைக்க முடியும் ?

ஓட்டுனருக்கு அருகில் குற்றவாளியை அமர வைத்து அழைத்துச் சென்ற அந்த முட்டாள் காவல்துறை அதிகாரி யார் ?

 ஏறக்குறைய அனைத்து காவல் துறையினருமே, தங்களது கைத்துப்பாக்கிகளை ஒரு கயிறோடு இணைத்து தோளில் இணைத்திருப்பார்கள். அவசரத்திற்கு அவர்களாலேயே எடுக்க முடியாது. அப்படி இருக்க, உதவி ஆய்வாளரின் துப்பாக்கியை குற்றவாளியால் எப்படி எளிதாக எடுக்க முடிந்தது ?

அப்படி குற்றவாளி துப்பாக்கியை எளிதாக எடுக்க முடியும் அளவுக்கு கவனக் குறைவாக அந்த உதவி ஆய்வாளர் இருந்த காரணம்  என்ன ?

காயம் அடைந்த உதவி ஆய்வாளர்கள் இருவரும் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். உளவுப் பிரிவில் இருக்கும் இருவர் எதற்காக பாதுகாப்புப் பணிக்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள்.   உளவுப் பிரிவில் இருப்பவர்களுக்கு ஆயுதம் வழங்கும் வழக்கம் காவல்துறையில் இல்லையே.. இவர்களிடம் எப்படி துப்பாக்கி வந்தது ?

முக்கிய குற்றவாளிகளை அழைத்துச் செல்லுகையில், ஆயுதம் தாங்கிய ஆயுதப் படை காவல் துறையினரை உடன் அனுப்புவது வழக்கம். இந்த நேர்வில், ஆயுதப் படை காவல்துறையினர் ஏன் இவர்களோடு அனுப்பப் படவில்லை ?

பயிற்சி இல்லாதவர்கள் அவ்வளவு எளிதாக, சேப்டி கேட்சை விடுவித்து, துப்பாக்கியை பயன்படுத்துவது எளிதல்ல.   அதுவும் ரிவால்வரை, பயிற்சி இல்லாமல் பயன்படுத்த முடியாது. அப்படி இருக்க ஒரு சாதாரண டிரைவரான மோகன்ராஜால், எப்படி எடுத்த எடுப்பிலேயே சுட முடிந்தது ?

காயம் அடைந்த இரு உதவி ஆய்வாளர்களும், நீதிமன்றம் நியமிக்கும் தனியார் மருத்துவ அதிகாரிகளால் பரிசோதிக்கப் பட தயாரா ?

இன்றைய மாலை மலரில் சைலேந்திர பாபு அளித்த பேட்டியாக, என்கவுண்டர் போதனூர் வெள்ளானூர் சாலையில் குப்பைமேடு என்ற பகுதிக்கு அருகில் நடந்ததாக கூறியிருக்கிறார்.   குழந்தைகள் இருவரும் கொல்லப் பட்ட பொள்ளாச்சிக்கு சம்பந்தமே இல்லாத போதனூர் வெள்ளானூர் சாலைக்கு இந்த வண்டி எடுத்துச் செல்லப் பட்டதற்கான காரணம் என்ன ?

மோகன்ராஜ் மற்றும் மனோகரன் என்ற இரு குற்றவாளிகள் இருக்கையில் மோகன்ராஜை மட்டும் தனி வண்டியில் அழைத்துச் செல்வதற்கான காரணம் என்ன ?

தொழிலாளர் உரிமைக்காக குரல் கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சவுந்தர்ராஜனுக்கெல்லாம் கை விலங்கு போடும் காவல்துறை, மோகன்ராஜுக்கு கைவிலங்கு போடாத மர்மம்  என்ன ?

இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள், முழுமையான விசாரணை நடத்தினால் தான் தெரியும்.

இந்தப் போலி மோதல் படுகொலையில் சம்பந்தப் பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கோரி, சிறைக் கைதிகள் உரிமை மையம் சார்பாக உள்துறைச் செயலாளர், பொதுத் துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகிய மூவருக்கும் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடப் படும்.

இப்போது தார்மீகமான விஷயங்களுக்கு வருவோம். அந்தக் கொடியவர்கள் புரிந்த குற்றத்தை எப்படி மன்னிக்க முடியும், மனித உரிமை பேசுபவர்கள் பாதிக்கப் பட்டவர்களின் உரிமையைப் பற்றிப் பேசுவதில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள்.

அந்தக் கொடியவர்கள் புரிந்த குற்றத்தை யார் மன்னிக்கச் சொன்னது ? அவர்கள் விடுதலை செய்யப் பட வேண்டும் என்று யார் சொன்னது ?   ஆனால் அவர்களை தண்டிக்கும் உரிமை சட்டத்துக்கும் நீதிமன்றத்துக்கும் மட்டும் தானே உண்டு ? இது போன்ற மிருக தண்டனை வழங்குவதானால், சட்டமும் நீதிமன்றமும் எதற்கு ? இழுத்து மூடி விடலாமே ?

இந்த இரண்டு குழந்தைகளைப் போலத்தானே, தினகரன் அலுவலகத்தில் எரித்துக் கொல்லப் பட்ட மூன்று பேரும் அவர்கள் பெற்றோருக்கு குழந்தைகள் ?   அதற்காக அழகிரியை என்கவுண்டர் செய்வாரா கருணாநிதி ? அட்டாக் பாண்டியை என்கவுண்டர் செய்ய உத்தரவிடுவாரா கருணாநிதி ?

சமீபத்தில் “தி எக்ஸ்பெரிமெண்ட்“ என்ற ஒரு படம் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்தப் படத்தில், ஒரு தனியார் நிறுவனம், உளவியல் பரிசோதனைக்கு உட்பட ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுக்கும். அந்த பரிசோதனைக்கு உட்பட்டால், பரிசோதனை முடிந்தவுடன் ஒரு நபருக்கு 10,000 டாலர் என்று அறிவிக்கப் படும். விளம்பரத்தைப் பார்த்தவுடன், கதாநாயகனும் மற்றும் பலரும் விண்ணப்பிப்பார்கள்.

இன்டர்வியூ நடக்கையில் ஒவ்வொரு நபரின் உளவியல் தன்னை பரிசோதிப்பார்கள். தேர்வு முடிந்தவுடன், அனைவரிடமும், இந்தப் பரிசோதனையின் போது, உங்கள் மனித உரிமைகள் மீறப்படலாம். அதனால், விருப்பமில்லாதவர்கள் உடனடியாக விலகலாம் என்று அறிவிக்கப் படும். ஆனால் பணத் தேவை காரணமாக ஒருவரும் விலக மாட்டார்கள்.

பரிசோதனை தொடங்கும் முன்பு, அவர்களிடம் உங்களில் சிலர் கைதிகளாகவும், சிலர் சிறை வார்டர்களாகவும் பிரிக்கப் படுவீர்கள். கைதிகளை பராமரிப்பது வார்டர்களின் வேலை. கைதிகள் சரியாக நடத்தப் பட வேண்டும். ஒழுங்கு தவறினால் அவர்கள் வழிக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வன்முறையில் ஈடுபட்டால் பரிசோதனை கைவிடப் படும். யாருக்கும் பணம் கிடையாது. ஆனால் கைதிகள் ஒழுங்கு படுத்தப் படாமல் விட்டாலும் பணம் கிடையாது. இங்கே உள்ள சிவப்பு விளக்கு எரிந்தால், பரிசோதனை கைவிடப் பட்டதாக அர்த்தம் என்று கூறுவார்.

பரிசோதனை தொடங்கும்.   கதாநாயகனும் மற்றவர்களும் கைதியாகவும், மீதி பேர் சிறை வார்டர்களாகவும் பிரிக்கப் படுவர். கைதிக்கு தனியாகவும், வார்டர்களுக்கு தனியாகவும் சீருடை வழங்கப் படும்.

இன்டர்வியூ சமயத்தில் கதாநாயகனுடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த ஒருவர், சிறை வார்டராகி விடுவார். அவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்.

முதல் நாள் கைதிகள் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும். உணவு சரியில்லாமல் இருந்ததால், உணவை குப்பையில் கொட்ட சில கைதிகள் முயற்சி செய்வார்கள். அப்போது கதாநாயகனுக்கும் அவன் நண்பனுக்கும் வாக்குவாதம் ஏற்படும். அன்று இரவு கதாநாயகன் அவன் அறையில் அடைக்கப் பட்டவுடன், ஏற்கனவே சிறை சென்ற அனுபவம் உள்ள ஒருவர் அந்த பரிசோதனையில் கலந்து கொண்டு கதாநாயகன் அறையில் இருப்பார். அவர், கதாநாயகனிடம், பேசாமல் அவர்களுக்கு அடங்கிப் போய் விடு என்பார்.   சிறை வார்டர்களை பகைத்துக் கொண்டால் உன்னால் சிறையில் காலம் தள்ள முடியாது என்பார். அப்போது கதாநாயகன், இது பரிசோதனை தானே. அவர்கள் என்ன உண்மையான வார்டர்களா என்பார்.   அதற்கு அந்த நபர், ஒரு அறைக்குள் மனிதர்களை பூட்டி வைத்தால் அவர்கள் தானாக மிருகமாக மாறி விடுவர் என்கிறார். அதை மறுக்கும் கதாநாயகன், பரிணாம வளர்ச்சிச் சங்கிலியில் முதல் சங்கிலி மனிதன். அவன் குரங்கை விட மேலே இருக்கிறான். அவனை மாற்ற முடியாது என்பார்.

அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் சம்பவங்கள், கதாநாயகனையும் அவன் நண்பனையும் நேரடியாக மோத வைக்கும் சூழலை ஏற்படுத்தும். கைதிகளின் மீது அதிகாரம் செலுத்த செலுத்த, கதாநாயகனின் நண்பனுக்கு மிகுந்த போதை உண்டாவதை உணர்வான்.   அதனால், கதாநாயகன் கைதிகளை தூண்டுகிறான் என்று கதாநாயகனை அடித்து, துவைத்து அவன் மீது சிறுநீர் கழித்து, தனிமைச் சிறையில் அடைத்து விடுவான்.

இறுதியில், தனிமைச் சிறையில் இருந்து தப்பித்த கதாநாயகன், வேறு வழியின்றி வன்முறையை கையாள்வான். அவனிடம் சிக்கும், அவன் நண்பனை அடி அடி என்று அடித்துத் துவைத்துக் கொண்டிருக்கும் போது, சிவப்பு விளக்கு எரியும். கதவு திறக்கும். பரிசோதனை முடிந்தது என்று அறிவிக்கப் பட்டு அவர்கள் வந்த இடத்துக்கே பேருந்தில் அழைத்துச் செல்லப் படுவர். அப்போது பூட்டிய அறைக்குள் மனிதர்கள் மிருகமாகி விடுவார்கள் என்ற கூறிய முன்னாள் சிறைக் கைதி, பரிணாம வளர்ச்சிச் சங்கிலியில் மனிதன் தான் முதன்மையானவன் என்று கூறினாயே… இப்போது என்ன கூறுகிறாய் என்று கதாநாயகனைப் பார்த்துக் கேட்பான்.   அதற்கு கதாநாயகன், இப்போதும் அதையேதான் கூறுகிறேன். ஏனென்றால், மனிதனால் மட்டும் தான், அவன் விலங்காய் மாறுவதை சரிசெய்ய முடியும் என்பான்.

ஒரு விலங்கு புரிந்த குற்றத்திற்கான தண்டனையை நாகரீக வழியில், நாம் அமைத்த நீதிமன்றங்களின் படியும், சட்டங்களின் படியும் பெற்றுத் தரப் போகிறோமா அல்லது அந்த விலங்குக்கு மிருக தண்டனை வழங்குவதன் மூலம் நாமும் விலங்காக மாறப் போகிறோமா என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த என்கவுண்டருக்கு கருணாநிதியை ஏன் காரணம் வேண்டும்.. ? காரணம் இருக்கிறது. இந்த என்கவுண்டருக்கான பின்னணியையும், இதில் உள்ள அரசியலையும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த வாரம் சட்டமன்ற கூட்டத் தொடர் கூடுகிறது.   சமீபத்தில் நடந்த கடத்தல் சம்பவங்கள், காங்கிரசாருக்கு வரும் மிரட்டல் கடிதங்கள், ராஜீவ் சிலை உடைப்பு விவகாரம், டிஜிபி நியமனம், வசந்தி ஸ்டான்லியின் போலி ஆவண மோசடி, சட்டம் ஒழுங்கு என்று சுற்றி சுற்றி காவல் துறையைப் பற்றி பல்வேறு பிரச்சினைகளை கிளப்பத் திட்டமிட்டுள்ளதாக கருணாநிதிக்கு தகவல் வருகிறது. இந்தப் பிரச்சினைகளை ஓரங்கட்ட ஒரே வழி யாரையாவது என்கவுண்டரில் போட்டுத் தள்ளலாம். போட்டுத் தள்ளி விட்டு, அதை வைத்து சட்டசபையில் ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல் துறை (மயிரப் புடுங்குனானுங்க) என்று கதை விடலாம் என்று ஜாபர் சேட் கருணாநிதிக்கு யோசனை சொல்லுகிறார்.

இந்தத் திட்டத்தின் படி முதலில் வலையில் சிக்குபவர் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள மணல் மேடு சங்கரின் கூட்டாளி கேப்ரியெல். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 6.11.2010 அன்று வெளிவந்த நவீன சரோஜாதேவியில் (அதான் சார் நக்கீரன்) தஞ்சை மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணன் உயிருக்கு ஆபத்து என்றும், அவரின் அண்ணன் பூண்டி கலைச் செல்வனை கொலை செய்த மணல் மேடு சங்கரின் கூட்டாளி கேப்ரியெல் என்பவர் சிறையில் இருக்கிறார் என்றும், அந்த கேப்ரியல் கலைவாணனை கொல்ல முடிவெடுத்து விட்டார் என்றும் அந்த மஞ்சள் பத்திரிக்கை புளுகியிருந்தது.   காமராஜும் நக்கீரனும், எப்படிப் பட்ட தரம் தாழ்ந்த குப்பையாகி விட்டார்கள் என்பதைப் பாருங்கள்.

இந்தச் செய்தியை அடுத்து, கேப்ரியெல் வேலூர் சிறையை விட்டு திடீரென்று மாற்றப் படுகிறார். எங்கே கொண்டு செல்லப் பட்டார் என்பதே தெரியவில்லை. தமிழக மக்கள் உரிமைக் கழகத்துக்கும், சவுக்குக்கும், கடந்த ஞாயிறன்று கேப்ரியல் என்கவுண்டரில் கொல்லப் படப் போகிறார் என்ற தகவல் வந்ததும், தெரிந்த அனைத்துச் செய்தியாளர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்தத் தகவலைச் சொல்லி, உறுதிப் படுத்த முயற்சி எடுக்கப் பட்டது.

இந்தத் தகவல் வெளியானதும், கேப்ரியலை கொலை செய்யும் திட்டம் கை விடப் பட்டது. கேப்ரியலுக்கு அடுத்த பலி கடாதான் இன்று கொல்லப் பட்ட மோகன்ராஜ்.

கேப்ரியல் கொலைத் திட்டம் ஒரு வேளை சிறப்பாக நிறைவேறியிருந்தால் இன்று மோகன்ராஜ் கொல்லப் பட்டிருக்க மாட்டார்.

ஞாயிறன்று வேலூர் சிறையை விட்டு எடுக்கப் பட்ட கேப்ரியல் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

மோகன்ராஜ் என்கவுண்டர் நடந்ததும், கேப்ரியலும் கொல்லப் பட வாய்ப்பு உள்ளது என்று அறிந்து மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு மற்றும் வழக்கறிஞர் ரஜினி காந்த் உடனடியாக செயலில் இறங்கினர். இன்று காலை சங்கரசுப்பு சார்பில் ஒரு தந்தி அனுப்பப் பட்டது. மதியம், உயர்நீதிமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பாக இந்த என்கவுண்டர் விஷயமும், கேப்ரியல் உயிருக்கு ஆபத்து என்ற விஷயமும், நாளை நாகப்பட்டிணம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில், கேப்ரியல் கொல்லப் பட வாய்ப்பு இருக்கிறது என்றும் நீதிமன்றத்தில் சொன்னதை அடுத்து சிறப்பு வழக்காக இந்த வழக்கு இன்று மாலை 4.30 மணியளவில் விசாரைணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
 

(இப்படி இடுப்புல டைட்டா பெல்ட்டோட இருக்கற துப்பாக்கிய எப்படி சார் மோகன் ராஜ் எடுத்தாரு ?  உங்கள மாதிரியே உங்க சப்.இன்ஸ்பெக்டருங்களும் பாம்பு புடிச்சுக்கிட்டு இருந்தாங்களா ?)
வழக்கை விசாரித்த நீதிபதி, நாகப்பட்டிணம் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரென்சிங் வசதி உள்ளதா என்று கேட்டார். இல்லை என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்ததும், நாகப்பட்டினம் நீதின்றத்துக்கு எடுத்துச் சென்று, திரும்ப வேலூர் சிறைக்கு அழைத்து வரப்படும் வரை, வழக்கமாக வழங்கப் படுவதை விட கூடுதல் பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இவ்வளவு விரைவாக இந்த வழக்கை நீதிமன்றம் கொண்டு வந்து உத்தரவு பெற்ற மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவையும், வழக்கறிஞர் ரஜினிகாந்தையும், சவுக்கு பாராட்டுகிறது.

அடுத்து, என்கவுண்டர் தொடர்பாக ப்ளாஷ் செய்தியில், பல வாசகர்கள், சவுக்கின் இந்த என்கவுண்டருக்கு எதிரான செய்தியை கடுமையாக கண்டனம் செய்திருக்கிறார்கள். ஒரு அன்பர் பின்னூட்டத்தில், இனி சவுக்குப் பக்கமே தலை வைத்துப் படுக்கப் போவதில்லை என்று எழுதியிருக்கிறார். மற்றொரு நண்பர், சவுக்குக்கு ஜாபர் சேட் எவ்வளவோ தேவலை என்று எழுதியிருக்கிறார். இன்னொரு நண்பர் கருணாநிதியை எதிர்ப்பதே உனக்கு வேலை என்று எழுதியிருக்கிறார்.   மற்றொரு நபர், உன்னுடைய தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சிக்காக இதை எழுதியிருக்கிறாய் என்கிறார்.

கலிலியோ பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்ற போது, அவனை பைத்தியக்காரன் என்றார்கள். டார்வின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை சொன்னபோது அவனையும் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். அப்போது பைத்தியக்காரன் என்று சொன்னவர்கள்தான் பெரும்பாலானவர்கள்.   

ஆகையால் பெரும்பாலானவர்கள் சொல்லுவதனாலேயே ஒரு விஷயம் சரியாகி விடாது என்பதை மட்டும் சவுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.
 Thanks
www.savukku.net

No comments: