13 November 2010

ரூபாய் நோட்டு குறியீட்டை வடிவமைத்த உதயகுமாருக்கு அண்ணா பல்கலை.யில் பாராட்டு.

சென்னை: ரூபாய் நோட்டு குறியீட்டை வடிவமைத்த உதயகுமாருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.




அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகத்தின் சுற்றுலா மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கு நேற்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.



இதை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவஹர் துவங்கி வைத்தார். கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக கட்டிடக்கலை கல்லூரியின் முன்னாள் மாணவரும், கவுகாத்தி ஐ.ஐ.டி. உதவி பேராசிரியரும், ரூபாய் நோட்டு குறியீட்டை வடிவமைத்தவருமான உதயகுமார் கலந்து கொண்டார்.



இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமைத் தேடிக்கொடுத்த அவருக்கு மன்னர் ஜவஹர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினார். மேலும், அண்ணா பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் கல்பனாவும் உதயகுமாரை கவுரவித்து பாராட்டினார்.



இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங் டீன் மான்சிங் தேவதாஸ், நெதர்லாந்து தூதரக கலாசார விவகாரத்துறை தலைவர் சாரா எம்.கோஹன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கிண்டி பொறியியல் கல்லூரியின் டீன் பேராசிரியர் சேகர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், ஆர்.டி.அறக்கட்டளை நிறுவனர் சேவியர் பெனடிக்ட், பேராசிரியர் சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: