சென்னை: சிறையில் இருந்து விடுதலையான அரசியல் கைதிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.இக்பால் முன்பு ஆஜராகி மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பற்றி புகார் அளித்துள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி. கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஆயிரத்து 405 கைதிகள் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்கப்பட்டனர். இதில் அரசியல் கைதிகளும் அடக்கம்.
இதை எதிர்த்து நான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் விடுதலையான அரசியல் கைதிகள் யாரும் அரசியல் பணியில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தோல்வி பயத்தால் இந்த உத்தரவை மீறி தென் மாவட்டங்களில் அரசியல் கைதிகளை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
அவர்கள் என்னவென்றால் எங்கள் கட்சி வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்துமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
அப்போது அரசு தரப்பில் வக்கீல் ராஜா கலிபுல்லா ஆஜராகி இடைக்கால உத்தரவு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பின்னர் நிருபர்களிடம் சாமி கூறியதாவது,
தென் மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளிலும் தோற்றுவிடுவோமோ என்று திமுக பயப்படுகிறது. அதனால் தான் விடுதலையான அரசியல் கைதிகளை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், ஏர்டெல் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment