24 March 2011

பெண்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காத பா.ம.க.,: 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்போம் என்கிறது.


பா.ம.க., தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்துவோம் என அறிவித்த ராமதாஸ், தன் கட்சி சார்பில் ஒரு பெண் வேட்பாளரை கூட நிறுத்தாதது, அவரது கட்சியில் உள்ள மகளிரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடந்த 21ம் தேதி, கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க, வலியுறுத்துவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேடைகளில் ராமதாஸ் பேசும்போதும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்தத் தலைமுறையே கல்வி கற்றதற்கு சமம். பெண்கள் வரதட்சணை கொடுக்கக் கூடாது. படித்து வேலைக்கு செல்ல வேண்டும். பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும். அவர்களை சமமாக நடத்த வேண்டும். பெண்கள் சொல்வதை கேட்டு ஆண்கள் நடக்க வேண்டும் என அறிவுரை வழங்குவார். அவை அனைத்தும் பேச்சளவே என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வின் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மேடைதோறும் பேசி வந்த ராமதாஸ், தன் கட்சியில் ஒரு சீட் கூட பெண்களுக்கு ஒதுக்க முன் வராதது, அவரது கட்சியில் உள்ள பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், இட ஒதுக்கீட்டிற்காக போராடுவதாகக் கூறிக் கொண்டு, இரண்டு தனித் தொகுதிகளை மட்டும் கூட்டணியில் பெற்றுள்ளார். அதில் மட்டுமே ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளில் தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே களம் இறக்கியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க., மட்டுமின்றி, அனைத்து கட்சிகளுமே குறைந்த அளவிலேயே பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள், தங்கள் கட்சியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடை அமல்படுத்த முன் வரவில்லை. பா.ம.க., ஒரு பெண் வேட்பாளரை கூட நிறுத்தாததன் மூலம், ஊருக்குதான் உபதேசம் எனத் தெரிவித்துள்ளது.

No comments: