29 March 2011

வானிலையை ஆராய புதிய செயற்கைக்கோள் : இஸ்ரோ இணை இயக்குனர் தகவல்.

சென்னை : ""வானிலை பற்றி ஆராயும், புதிய செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும்,'' என, இஸ்ரோவின் புவி கண்காணிப்பு அமைப்பின் இணை இயக்குனர் திவாகர் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ), புவி கண்காணிப்பு குறித்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. செயற்கைக்கோள் உதவியுடன், நாட்டில் உள்ள தரிசு நிலங்கள், நிலத்தடி நீர் ஆகியவற்றை கண்டறியும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு, இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம், எல்லா திசையிலும் நாட்டின் புவி குறித்த தகவல்களை, சாதாரண மனிதனும் அறியும் வகையில், "புவன்' என்ற வெப் மேப் சேவையைத் துவங்கியது.

 இந்த சேவையின் தமிழ் பதிப்பின் முன் மாதிரி, நேற்று சென்னையில் துவக்கப்பட்டது. இந்த சேவையில், திங்கள், வெள்ளி மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள், கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டிய தூரம் மற்றும் மீன் வளம் நிறைந்த இடம் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெறும். சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையமும் இணைந்து, "இந்திய புவி ஆய்வு பார்வையகம்(புவன்)' குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாள் பயிலரங்கை நடத்தின.

நிகழ்ச்சியில், இஸ்ரோவின் புவி கண்காணிப்பு அமைப்பின் இணை இயக்குனர் திவாகர் பங்கேற்று பேசியதாவது: கடந்த 1988ம் ஆண்டு, பூமி பற்றி ஆராய இஸ்ரோ, "ஐ.ஆர்.எஸ் 1 ஏ' என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. அதை தொடர்ந்து, "ரிசோர்ஸ் சாட் 1, கார்ட்டோ சாட் 2' என, பல செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. தொடக்கத்தில் இருந்ததை விட, செயற்கைக்கோள் பூமியை 80 செ.மீ., அளவுக்கும் புகைப்படம் எடுக்க முடியும். அந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற சேவையை விட, "புவன்'ல் தொடுக்கப்பட்ட படங்கள் இந்திய செயற்கைக்கோள் அனுப்பிய படங்களாகும். நாட்டில் நடக்கும் பேரிடர் குறித்த தகவல், நிலம், நீர் மற்றும் கனிம வளங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். வானிலை பற்றி ஆராய, விரைவில், "மெகா ட்ரோபிக்குஸ்' என்ற புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்புகிறது.

இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த செயற்கைக்கோள், வானிலை பற்றிய ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு திவாகர் பேசினார். நிகழ்ச்சியில், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய துணைத் தலைவர் அய்யம்பெருமாள், ஐ.ஐ.டி.,யின் சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் ராமமூர்த்தி, அறிவியல் நகரத் தலைவர் முனைவர் முத்துகுமரன் ஆகியோர் பங்கேற்றனர்

No comments: