கோவை: "பெண்கள் பெயரில் "மெசேஜ்' அனுப்பி, ஆயிரக்கணக்கில் கட்டணத்தைக் கூட்டி பணம் பறிக்கும் மொபைல் நிறுவனம் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட வக்கீல், போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்; வக்கீல். கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை சந்தித்து கொடுத்த புகார் மனு: குனியமுத்தூர், சன்கார்டன் பகுதியில் ஏழு ஆண்டுகளாக வசிக்கிறேன். சமூகப் பணியில் இருக்கும் நான், தனியார் மொபைல் நிறுவனத்தில் போஸ்ட் பெய்ட் சந்தாதாரர். இரண்டு மாதங்களாக எனது மொபைல் போனுக்கு அதிகளவில்,"ஸ்வீட்டி எங்கே இருக்கிறீர்கள்? உங்களுடன் பேச வேண்டும். உங்கள் போன் அழைப்பை எதிர்பார்த்துள்ளேன். ப்ளீஸ்... "008823490946' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்' என வருகிறது. பலமுறை இதுபற்றி மொபைல் நிறுவன அலுவலகத்தில் தொடர்பு கொண்டும், மெசேஜ் வருவது தொடர்கிறது. கடைசியாக பிப்.,4ல் மெசேஜ் வந்தது. போலீசில் புகார் தருவதற்காக மெசேஜ் மூலம், போன் எண்ணை கண்டுபிடித்து,தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் எடுத்தவர்கள் பேசிய மொழி தெரியவில்லை. மாறாக அது, "கால்சென்டர்' என தெரிந்து கொண்டு, போனை வைத்து விட்டேன்.
அடுத்த நாள் மீண்டும் போன் வந்தது. காத்திருப்பதாக ஒரு பெண் பேசினாள். தமிழில் பேசும்படி தெரிவித்தேன். சில நொடிகளுக்குப் பின், தமிழ் தெரிந்த பெண் பேசினார். "எங்கிருந்து பேசுகிறீர்?' என கேட்ட போது அப்பெண் "துபாய்' என்றாள். அடுத்த சில நிமிடங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகில் இருந்து பேசுவதாகக் கூறினாள். எதற்காக தொடர்ந்து மெசேஜ் அனுப்பப்படுகிறது என கேட்டபோது, "நட்பை வளர்த்துக் கொள்ள...' எனக் கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார். அப்போது தான் அது, "சேட்டிலைட் போன்' என அறிந்தேன். ஏர்செல், பி.எஸ்.என்.எல்.,தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டபோது இணைப்பு கிடைக்கவில்லை. அடுத்த சில நாட்களிலும் மெசேஜ் வந்தது. ஒவ்வொரு நாளும் மொபைல் போனுக்கு வரும் மெசேஜ்களின் கட்டணம் குறித்து கேட்டுக் கொண்டேன். பிப்.,6, நள்ளிரவு கிடைத்த மெசேஜ்படி, 367.50 ரூபாய் என வந்தது.
அடுத்த நாள், பிப்.,5 வரை பயன்படுத்தியதற்கான கட்டணம் 6,468.50 ரூபாய் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பிப்.,8 அன்று அன்னா என்பவர் பெயரில் வந்த மெசேஜில், 006703306088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என தெரிவித்தது. போஸ்ட் பெய்ட் திட்டத்தில், இது போன்று மனஉளைச்சலை ஏற்படுத்தும் மெசேஜ்கள் வருவதோடு, வீணாக பணச்செலவும் ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பணம் பறிக்க இது போன்ற சேவையை சம்பந்தப்பட்ட நிறுவனம் நடத்துகிறதா அல்லது பணம் பறிக்க கால்சென்டர்களை, சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனம் நியமித்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டவிரோத சேவையை மேற்கொண்டு, பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டுள்ளவர்களை விசாரித்து, தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு, கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் வக்கீல் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நன்றி - தினமலர்
No comments:
Post a Comment