24 March 2011

உழைத்தவர்களுக்கு கவுரவம் - தே.மு. தி.க. "பார்முலா"


சொந்த பணத்தில் பல கோடி ரூபாயை செலவழித்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த மாவட்ட செயலர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் போட்டியிட தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் அதிகளவு சீட் வழங்கியுள்ளார். ரசிகர் மன்றத்தில் இருந்தே தன்னுடன் இருப்பவர்களுக்கும் சீட் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு. தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 21ம்தேதி, நான்கு கட்டமாக அறிவித்தார். சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து விஜயகாந்த் அறிவித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தே.மு.தி.க., துவங்கி ஐந்து ஆண்டுகளாகிறது. குறுகிய காலத்திற்குள் முக்கிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் கட்சித் தலைவர் விஜயகாந்தின் சிறப்பான செயல்பாடே. தற்போது, வேட்பாளர் தேர்வையும் விஜயகாந்த் சிறப்பாக செய்து முடித்துள்ளார். கட்சி வளர்ச்சிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்த பணத்தை செலவழித்த மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் மதிப்பளித்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சி.எச்.சேகர் (கும்மிடிபூண்டி), மேற்கு மாவட்ட செயலர் அருண் சுப்பிரமணியம், மதுரை தெற்கு மாவட்ட செயலர் ராஜா (திருப்பரங்குன்றம்), காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் முருகேசன் (செங்கல்பட்டு), திருச்சி தெற்கு மாவட்ட செயலர் செந்தில்குமார்(திருவெறும்பூர்), நாகை வடக்கு மாவட்ட செயலர் பால அருட்செல்வம் (மயிலாடுதுறை), வேலூர் மத்திய மாவட்ட செயலர் வேலு (அணைக்கட்டு), கடலூர் வடக்கு மாவட்ட செயலர் சிவக்கொழுந்து (பண்ருட்டி) ஆகியோருக்கு போட்டியிட சீட்கள் வழங்கியுள்ளார்.

மேலும், கோவை தெற்கு மாவட்ட செயலர் தினகரன் (சூலூர்), பெரம்பலூர் மாவட்ட செயலர் துரை காமராஜ் (குன்னம்), சேலம் மேற்கு மாவட்ட செயலர் பார்த்திபன்(மேட்டூர்), சேலம் கிழக்கு மாவட்ட செயலர் மோகன்ராஜ் (சேலம் வடக்கு), விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் (திருக்கோவிலூர்), திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியம்(ஆத்தூர்), நீலகிரி மாவட்ட செயலர் செல்வராஜ் (கூடலூர்), நாமக்கல் மாவட்ட செயலர் சம்பத்குமார்(திருச்செங்கோடு) ஆகியோரையும் வேட்பாளராக்கியுள்ளார். இவ்வாறு, மொத்தம் 16 மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் சீட் வழங்கியுள்ளார். இதேபோல, ரசிகர் மன்றத்தில் இருந்தே தன்னுடன் இருப்பவர்களுக்கும் சீட் வழங்கி விஜயகாந்த் கவுரவப்படுத்தியுள்ளார். இந்த பட்டியலில் கட்சி பொருளாளர் சுந்தர்ராஜன்(மத்திய மதுரை), தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி (விருகம்பாக்கம்), கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), இளைஞர் அணி துணை செயலர் நல்லதம்பி(எழும்பூர்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களோடு, தனது நீண்டகால நண்பரான நடிகர் அருண் பாண்டியனுக்கும்(பேராவூரணி)போட்டியிட சீட் வழங்கியுள்ளார். தே.மு.தி.க., சார்பில் போட்டியிட சீட் கேட்ட ஒரே நடிகர் இவர் என்பதாலும், சீட் வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அரசியலை தவிர்க்கும் வகையில் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் (மாநில இளைஞர் அணி செயலர்) ஆகியோருக்கும் சீட் வழங்குவதை விஜயகாந்த் தவிர்த்துள்ளார். இப்படி, பலதரப்பட்டவர்களுக்கு மதிப்பளித்தும், கவுரவம் அளித்தும் விஜயகாந்த் சீட்களை வழங்கி, கட்சியினரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தே.மு.தி.க., சார்பில் போட்டியிட சீட் கேட்டு கோயம்பேடு கட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில், "பெட்டி' உடன் முகாமிட்டிருந்த பலரின் முகங்களில், இதன் மூலம் விஜயகாந்த் கரியை பூசியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: