திண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துக்கள் குவியத் துவங்கியுள்ளன.
வெற்றி குறித்து சுஜிதா கூறியதாவது:இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்.என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள
"ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்' என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன்.இவ்வாறு மாணவி சுஜிதா மகிழ்ச்சி பொங்க கூறினார்.
No comments:
Post a Comment