20 March 2011

தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு அருகே பிரசாரம் செய்ய தடை: தேர்தல் கமிஷன் அதிரடி


புதுடில்லி: தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடக்கும் பள்ளிகளுக்கு அருகே, தேர்தல் பிரசாரம் செய்ய தலைமை தேர்தல் கமிஷன் முழுமையாக தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பள்ளி பொதுத் தேர்வுகள் நடக்கும் காலத்தில், தேர்தல் நடத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டதாவது: பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் நடக்கும் காலத்தில், தேர்தல் நடப்பதால், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு, தேர்தல் கமிஷன் காணிக்க வேண்டும். தேர்வுகள் நடக்கும் பள்ளிகளுக்கு அருகே பிரசாரம் செய்வதையும், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும். தேர்வுகள் நடக்கும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை, தேர்வுகள் முடியும் வரை, விடுமுறை நாட்களான மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய நாட்களை தவிர, மற்ற நாட்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஏப்ரல் 11ம் தேதிக்கு முன்பாக, பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களை, தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக கைப்பற்றக் கூடாது. இது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், தற்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் தேர்வுகள் நடக்கும் பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து, 200 மீட்டருக்குள் தேர்தல் பிரசாரம் எதுவும் நடக்காமல் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் இருந்து 200 மீட்டருக்குள் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளிகளுக்கு அருகே ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதை, கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்காக, பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும், உகந்த இடங்களை, அடையாளம் காண வேண்டும். இந்த இடங்கள், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் இருந்து, 200 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். பிரசாரம் செய்வதற்கு அடையாளம் காணப்பட்ட இடங்களை, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments: