09 March 2011

பெண்கள் நடத்தும் வங்கி சேவை மையம்.


மதுரை: இந்தியாவிலேயே முதன்முறையாக பத்தாம் வகுப்பை தாண்டாத பெண்கள், பாரத் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையங்களை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் 2000 மற்றும் அதற்கு மேல் மக்கள்தொகையுள்ள கிராமங்களில் வங்கிகள், வாடிக்கையாளர் சேவை மையங்களை துவங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் கிராமப்புறங்களில் சேவை மையங்களை உருவாக்கி வருகின்றன. மதுரையில் வாடிப்பட்டியில் உள்ள "கிரெட்' தொண்டு நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியின் "வணிகத் தொடர்பு' மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒன்பது வாடிக்கையாளர் சேவை மையங்களை நிர்வகிக்க சுயஉதவிக்குழுப் பெண்கள் ஒன்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தொண்டுநிறுவன செயலாளர் அழகேசன் கூறுகையில்,"" கடந்த 25 ஆண்டுகளாக வங்கியுடன் மகளிர் குழுக்களின் கணக்கு வழக்குகளை பராமரித்து வருகிறோம். அலங்காநல்லூரில் கோட்டைமேடு, கொண்டையம்பட்டி, வாடிப்பட்டியில் கச்சைகட்டி, சோழவந்தானில் தென்கரை உட்பட மதுரையில் ஒன்பது இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம். மையத்திற்கு ஒருவர் வீதம் ஒன்பது பேர் தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்துள்ளோம். இந்தியாவிலேயே முதன்முறையாக எங்கள் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள், மையத்தை நடத்துவது பெருமையான விஷயம்,'' என்றார்.

வங்கி மண்டல மேலாளர் ராமானுஜம் கூறியதாவது: மதுரையில் 159 கிராமங்களில் வங்கி சேவை மையம் அமைக்க வேண்டுமென ஆய்வு செய்யப்பட்டது. எங்கள் வங்கியின் சார்பில் 48 கிராமங்களில் மையங்கள் துவங்க திட்டமிட்டுள்ளோம். அய்யங்கோட்டையில் சேவைமையம் துவக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக "கிரெட்' தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒன்பது மையங்கள் விரைவில் துவங்கப்படும். இங்கு "ஜீரோ பாலன்ஸ்' முறையில் வங்கிக் கணக்கு துவக்கலாம். ஒருநபர் அதிகபட்சமாக 10ஆயிரம் டெபாசிட் செய்யவோ, எடுக்கவோ முடியும். கிராமப்புறங்களில் வங்கிக்கணக்கை துவக்குவதற்கு கமிஷன் வழங்குகிறோம். தொண்டு நிறுவனத்தின் சார்பில் வாடகை கட்டடத்தில் கம்ப்யூட்டர், பிரின்டர், விரல்ரேகை கருவி பொருத்தப்படும், என்றார்

No comments: