சாதிக் பாட்சா காணாமல் போன விவகாரம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழும்பி நிற்கும் நிலையில், அவரது உடலை(!) அடையாளம் காண்பித்த ராசாவின் முன்னாள் உதவியாளரும், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் காப்பீடு ஏஜன்டுமாகிய விவேகானந்தன் அளித்துள்ள தகவல்கள், சாதிக் தற்கொலை(?) சம்பந்தமான சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.
கடந்த 16ம் தேதி பிற்பகல், 1.30 மணி அளவில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் சாதிக். அடுத்த 10 நிமிடங்களில், பிற்பகல், 1.40 மணிக்கு அவர் இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், மருத்துவமனையில் இருந்து சரியாக அடுத்த 30 நிமிடங்கள் கழித்து, அதாவது, 2.10க்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த, 5 முதல், 10 நிமிடங்களுக்குள் போலீசார் அங்கு வந்துள்ளனர். பொதுவாக, மருத்துவமனைக்குள் உடலில் காயங்களுடனோ, தற்கொலைக்கு முயன்றோ உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டால், மருத்துவமனையில் உள்ள விபத்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சேர்க்கப்பட்டவர் ஒரு வேளை இறந்துவிட்டால், உடனடியாக மருத்துவமனை அமைந்துள்ள சரக போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பது விதி. சாதிக் விவகாரத்தில், அப்போலோ மருத்துவமனையில் இருந்து, 30 நிமிடம் கழித்து, நிர்வாக மேல் மட்டத்தில் இருக்கும் ஒருவர், உளவுத் துறை போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான குறிப்பிட்ட காரணம் என்ன என்பது புதிராக உள்ளது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து, 2.50க்கு முழுக்க துணி சுற்றப்பட்ட நிலையில், சாதிக்கின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சூழலில், சாதிக்கின் முகத்தை போலீசுக்கு அடையாளம் காட்டிய ஒருவர், விவேகானந்தன் மட்டுமே.
அப்போலோ மருத்துவமனையில் சாதிக்கின் உடல் இருந்த, பரபரப்பான 80 நிமிடங்களில், சாதிக்கின் உடலை(!) அடையாளம் காட்டிய விவேகானந்தனுக்குரிய நிமிடங்கள் எவ்வளவு என்பது தான் தற்போதைய மர்மம். இந்த மர்மத்திற்கு, நிருபர் ஒருவரிடம் விவேகானந்தன் விடையளித்துள்ளார். சம்பவத்தன்று, நாங்கள் வரும்போதே விவேகானந்தன் மருத்துவமனையில் இருந்தார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இவரோ, தான் மருத்துவமனைக்கு வரும்போது, கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்(சாதிக்கின் கட்டுமான நிறுவனம்) ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், போலீசார் என 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது சந்தேகத்திற்கான விதை தூவிய அவரது முதல் தகவல். சாதிக் பாட்சாவை நன்கு அறிந்தவர் யாராவது உடலை அடையாளம் காட்ட வருமாறு, நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, "நான் காட்டுகிறேன்' என முந்திச்சென்ற விவேகானந்தன், உதவி கமிஷனருடன் சென்று அடையாளம் காட்டியுள்ளார். ஆனால், இவரே, "சாதிக்கின் சகோதரருக்கு பாலிசி பெற்றுத் தந்த வகையில் மட்டுமே அவரை தெரியும்' என, இப்போது கூறியுள்ளார். விவேகானந்தன், மருத்துவமனைக்கு வரும் போது, கிரீன் ஹவுஸ் புராமோட்டர்ஸ் நிறுவன ஊழியர்கள் அங்கிருந்ததாக அவரே கூறியுள்ளார். அவர்கள் இருக்கும்போது, உடலை அடையாளம் காட்ட இவர் முந்த வேண்டிய கட்டாயம் என்ன? ஆனால், போலீஸ் வரும் போது அங்கு விவேகானந்தனை தவிர வேறு யாரும் இல்லை என கூறப்படுகிறது.
போலீசார் அங்கு வரும்போதே, சாதிக்கின் உடலில் இருந்த கறுப்பு நிற பேன்ட், நீலத்தில் கறுப்புக் கோடு போட்ட சட்டை கழற்றப்பட்டு, வெள்ளை துணியால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு விட்டதாக, போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, "நான் முகத்தை பார்த்து அடையாளம் காட்டினேன். வேறு எதுவும் தெரியாது என விவேகானந்தன் தெரிவித்துள்ளார். சாதிக்கை, அவரது சகோதரரின் பாலிசி ஏஜன்ட் என்ற அளவில் மட்டும் தெரிந்த இவர், இந்த அளவிற்கு அவசரப்பட்டதன் அவசியம் என்ன என்பது, தெரியவில்லை. சாதிக் இறந்துவிட்டதாக, அன்று பிற்பகல் 1:40 மணிக்கு தகவல் வெளியாகியுள்ளது. இது, சாதிக்கின் டிரைவர், மனைவி, மாமியார் இவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், பாட்சா இறந்ததாக தகவல் கேள்விப்பட்ட நேரத்தில், தான் திருவல்லிக்கேணியில் இருந்ததாகவும், அங்கிருந்து ஆட்டோவில் அரை மணி நேரம் பயணித்து மருத்துவமனை வந்து சேர்ந்ததாகவும் விவேகானந்தன் சொல்கிறார். போலீசார் தரப்பு தகவல் படி, அவர்கள் வரும் போது விவேகானந்தன் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அப்படியென்றால், 1.45 மணிக்கு அவர் ஆட்டோவில் கிளம்பி இருக்க வேண்டும். அதாவது, பாட்சா இறந்ததாக அறிவிக்கப்பட்ட அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் புறப்பட்டிருக்க வேண்டும்.
சென்னையில் ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசவேண்டியிருக்கும் சூழலில், மரண தகவலை எதிர்பார்த்து, கிளம்புவதற்கு தயாராக, ஆட்டோவில் அமர்ந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்! ஏதோ ஒரு வகையில் இது சாத்தியம் என்றாலும், சாதிக் பாட்சா மரணச்செய்தியை போலீசுக்கு தெரிவிப்பதற்கு முன், இவருக்கு சொல்லியது யார்? சாதிக்கின் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி இருந்த அவரை மீட்ட மனைவியும், டிரைவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் இருக்கும் அவசரத்தில் வேறுயாருக்கும் தகவல் தெரிவித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. அப்படியிருக்கும் போது, "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் ஊழியர்கள் மூலம் அறிந்து கொண்டேன்' என்கிறார் விவேகானந்தன். அப்படியெனில், ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் சொன்னது யார்? மரணம் சம்பவித்த மறுநொடியில் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல், காவல்துறைக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டது ஏன்? பாலிசி என்ற பெயரில் அடிக்கடி சாதிக்கின் அலுவலகத்திற்கு இவர் சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியிருக்கும் போது, சாதிக்கின் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், இவருக்கு முதலில் தகவலை சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாட்சாவை, கார் டிரைவர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்த மனைவி, அவரது மரணச்செய்தி கேட்டவுடன் கிளம்பி விட்டார் என்கிறது போலீஸ் தரப்பு. கணவனின் மரணத்திற்கு கண்ணீர் சிந்தக்கூட வழியில்லாமல், உடனடியாக மனைவி கிளம்பியது ஏன்? அவர் கிளம்பியதாக சொல்லப்படுவது உண்மைதானா? ஆம் எனில், அந்த கட்டாயத்திற்கு அவரை தள்ளியது யார்? காவல்துறையின் தகவலுக்கும், விவேகானந்தனின் கூற்றுக்கும் நிறைய முரண்பாடுகள். இது ஏன்? பாட்சாவின் வீட்டில், மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி நடந்தது என்ன? தன்னிடம் பாலிசி எடுத்த நண்பரின் தம்பி எனும் நெருங்கிய (!) சொந்தம் கொண்ட விவேகானந்தன் தானாக சென்று அடையாளம் காட்டியது ஏன்? விவேகானந்தனுக்கும் பாட்சாவுக்கும் உள்ள நெருக்கம் எப்படி? பாட்சாவின் மரணச்செய்தியை விவேகானந்தன் அறிந்து கொண்டது எப்போது? அவருக்கு சொன்னது யார்? பாட்சாவின் கடைசி கட்ட தொலைபேசி பதிவுகளில் விவேகானந்தன் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? இவையனைத்திற்கும் விடை தெரிந்தால், சாதிக்கின் "இருப்பை' நெருங்கி விடலாம்.
நன்றி - தினமலர்
No comments:
Post a Comment