பேரூர் : கோவையில், வெற்றிலை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. கோவை மாவட்ட மக்களுக்கு தேவையான வெற்றிலை சேலம், கரூர், திருச்சி, பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தியாகி குமரன் மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த வாரத்தில் ஒரு பண்டல் வெற்றிலை, தரத்துக்கு ஏற்ப 600 ரூபாய் முதல் 1,500 ரூபாய்க்கு விற்றது. இது, தற்போது 7,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
விலையேற்றம் காரணமாக, 100 வெற்றிலை கொண்ட ஒரு கவுளி 60 முதல் 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. பெட்டிக்கடை, மளிகை கடைகளில், ஒரு ரூபாய்க்கு ஒரு வெற்றிலை விற்கப்படுகிறது. கோவில் பூஜை தொடங்கி, திருமணம் போன்ற சுபகாரியம் முதல் சடங்குகள் வரை அனைத்து நிகழ்ச்சியிலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது, பலமடங்கு விலை உயர்வால் வெற்றிலை பாக்கு போடுவோர் விரக்தியடைந்துள்ளனர்.
பேரூரைச் சேர்ந்த கருப்பாயி (80) என்பவர் கூறுகையில், "முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிலை போடுகிறேன். வெற்றிலையில் கற்பூர வெற்றிலை, காரவெற்றிலை, பச்சை வெற்றிலை, சக்கர வெற்றிலை, கறுப்பு கொடி வெற்றிலை என பலவகை உண்டு. கோவையில் எப்போதுமே கற்பூர வெற்றிலைக்கு அதிக கிராக்கி. வெற்றிலையின் விலை தற்போது போல், இதற்கு முன் விலை உயர்ந்தது இல்லை. கடந்த, 30 ஆண்டில் எப்போதும் இல்லாத அளவு, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு முறை வெற்றிலை மெல்ல ஆறு ரூபாய் வரை செலவாகிறது. அதுவே, நாளொன்றுக்கு 10 முறை போட்டால் 60 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. ஐந்து வெற்றிலையை ஐந்து ரூபாய் அல்லது நான்கு ரூபாய்க்கு வாங்கி, அதற்கு இரண்டு ரூபாய் மதிப்பிலான பாக்கு சேர்க்க வேண்டியுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment