டெல்லி: போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து உரிமம் பெற்ற ஏர் இந்தியா விமானியை நேற்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் கடந்த 5 நாட்களில் 2 விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரு விமானிகளின் சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து டிசிபி(குற்றப் பிரிவு) அஷோக் சந்த் கூறியதாவது,
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானி ஜே.கே. வர்மா போலிச் சான்றிதழ் கொடுத்து விமானி உரிமம் பெற்றுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் கொடுத்த புகாரின்பேரில் அவரை கைது செய்தோம். வர்மா பூனேவைச் சேர்ந்தவர். இதேபோன்ற மேலும் இரண்டு பேரின் சான்றிதழ்களை ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம்.
எம்டிஎல்ஆர் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமானிகள் மீனாக்ஷி சேகல் மற்றும் ஸ்வர்ன் சிங் ஆகியோர் மீதும் இதே போன்று புகார் வந்துள்ளன. மீனாக்ஷி டெல்லியில் உள்ள லாரன்ஸ் தெருவில் வசிக்கிறார். ஸ்வர்ன் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். தற்போது இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை போலிச் சான்றிதழ் சமர்பித்தற்காக பர்மிந்தர் கௌர் குலாட்டி (38) என்னும் பெண் விமானியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அடுத்தடுத்து விமானிகள் கைதாகியுள்ளதால், 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் விமானிகளின் உரிமங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஆய்வு செய்து வருவதாக அந்த துறையின் செயலாளர் நசிம் ஜைதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment