தஞ்சாவூர் : தஞ்சையில் வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா, மனு தாக்கல் செய்தார். தஞ்சை சட்டசபை தொகுதிக்கு வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா (தி.மு.க.,), நேற்று, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஒரு குவாலிஸ், ஒரு இன்னோவா காருடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் எஸ்.ஐ.,கள் ராஜேந்திரன், பாண்டி ஆகியோர் சல்யூட் அடித்து அமைச்சரை வரவேற்றனர். ஆர்.டி.ஓ., வாகனம் நிறுத்துமிடம் வரை கார் வந்தது.
வேட்பாளர் உபயதுல்லா, மாற்று வேட்பாளர் கலியமூர்த்தி உட்பட, 10 பேர் வந்தனர். "ஒரு வேட்பாளர், அவருடன் நான்கு பேர் மட்டும்' செல்ல வேண்டுமென போலீசார் கூறியும், "ஒரு வேட்பாளர், ஒரு மாற்று வேட்பாளர், இருவருக்கும் தலா நான்கு பேர் என 10 பேர் செல்லலாம்,' என வாக்குவாதம் செய்து, 10 பேருடன் உபயதுல்லா ஆர்.டி.ஓ., முத்துலட்சுமி அறைக்குள் சென்றார்.
ஐந்து பேர் தவிர, மற்றவர்கள் வெளியேறும்படி கூறியதும் நகராட்சித் தலைவர் தேன்மொழி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் நீலமேகம் என அனைவரும் வெளியேறினர். உபயதுல்லாவும், மாற்று வேட்பாளர் கலியமூர்த்தியும் மனு தாக்கல் செய்தனர்.
ஆர்.டி.ஓ., அறையின் வெளியே நின்ற நகராட்சித் தலைவரின் கணவர் ஜெயபால், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகளிடம், "பத்து பேர் போனால் என்ன செய்வீர்கள். தலையவா எடுத்துவிடுவீர்கள். எல்லாம் 10 நாளைக்குத்தான். பின், எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என, ஏகவசனத்தில் புலம்பித்தீர்த்தார்.
இதைத்தொடர்ந்து உபயதுல்லா, ""முதல்வர் கருணாநிதி என்னை இத்தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார். கருணாநிதியின் ஐந்தாண்டு சாதனை, உழைப்பு என்னை வெற்றி பெறச் செய்யும். ஆறாவது முறையாக அவர் முதல்வராவார். கடந்த முறை கதாநாயகனாக தேர்தல் அறிக்கை இருந்தாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இதுபோல, இம்முறையும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை பார்க்கிறோம். நிச்சயம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்,'' என்றார்.
மீண்டும் வளாகத்துக்குள்ளேயே வந்து நீண்டநேரம் காத்திருந்து கார்களில் அனைவரும் சென்றனர். போலீசாரை அழைத்து ஆர்.டி.ஓ., முத்துலட்சுமி, ""எத்தனை முறை கூறினாலும், வளாகத்துக்குள் ஏன் காரையும், கூட்டத்தையும் அனுமதிக்கிறீர்கள். வேட்பாளர்கள் அனைவரும் நமக்கு ஒன்றுதான். எப்படி ஒரு வேட்பாளரை மட்டும் சல்யூட் செய்து வரவேற்பீர்கள். குறிப்பிட்ட சிலரிடம் இவ்வாறு நடந்து கொண்டால் எஸ்.பி.,யிடம் புகார் செய்வேன்,'' என, கண்டித்தார்.
அதேநேரம், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்தை ஆர்.டி.ஓ., அழைத்தபோது, அவர் உள்ளே வராமல் டி.எஸ்.பி., மங்களேஸ்வரனுடன் வெளியே சென்றுவிட்டார். கொதிப்பில் ஆர்.டி.ஓ., பணியை தொடர்ந்தார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் மாற்று வேட்பாளர்களுடன் சேர்த்து 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டு வருவாய் ஆறு லட்சத்து 61 ஆயிரத்து 690 ரூபாய். வங்கி டிபாசிட் 15 லட்சத்து 775 ரூபாய். கையில் வைத்துள்ள பணம் இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாய். மூன்று லட்சம் மதிப்பில் குவாலிஸ் கார். சேமிப்புக்கணக்கில் உபயதுல்லா பெயரில் ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 352 ரூபாய், மனைவி பெயரில் 13 ஆயிரத்து 426 ரூபாய். எல்.ஐ.சி., பாலிசி 38 லட்சத்து 63 ஆயிரத்து 701. 30 லட்சத்தில் வீடு. 1.90 லட்சத்தில் நிலம், என மொத்தம் ஒரு கோடியே 96 ஆயிரத்து 65 ஆயிரத்து 654 ரூபாய் உள்ளது
No comments:
Post a Comment