16 January 2011

நேரடி காய்கறி விற்பனை மையங்களை அமைக்க தமிழக அரசு முடிவு.

CM Meetingசென்னை: தமிழகத்தில் தற்போது இயங்கும் 154 உழவர் சந்தைகளை வலுப்படுத்தவும், கூடுதலாக 25 இடங்களில் உழவர் சந்தைகளைப் புதிதாகத் தொடங்கவும், சென்னை மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மையங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.


புதிய தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஏ.வ.வேலு, தலைமைச் செயலாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


தமிழகத்தில் தற்போது இயங்கும் 154 உழவர் சந்தைகளை வலுப்படுத்தவும், கூடுதலாக 25 இடங்களில் உழவர் சந்தைகளைப் புதிதாகத் தொடங்கவும் நடவடிக்கை.


சென்னையில் தற்போது கூட்டுறவு அமைப்புகள் மூலமாக ஒரு நாளைக்குச் சுமார் 20 டன் காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மையங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை.


நியாய விலைக்கடைகள் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் மற்றும் மளிகைப் பொருட்கள் போதிய அளவு இருப்பு வைத்து, எந்த தட்டுப்பாடுமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை.


சர்க்கரை விலையைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்க, முன்பேர வர்த்தகத்திலிருந்து சர்க்கரையைத் தவிர்க்க மத்திய நிதியமைச்சருக்கு உடனடியாகக் கடிதம்.


நீண்டகாலத் திட்டமாக பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டங்களைத் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை.


நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலும், உழவர் சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காய்கறிகளைப் பயிரிட வாய்ப்புள்ள கிராமங்களைக் கண்டறிந்து, தரமான விதைகளை வழங்குதல் மற்றும் பல்வேறு வேளாண் யுக்திகளை விவசாயிகளிடம் பரப்பி, காய்கறி சாகுபடி பரப்பளவையும், உற்பத்தியையும் பெருக்கிட தீவிர நடவடிக்கை.


வரும்காலங்களில் விவசாயப் பொருள்களின் விற்பனை மையங்களை நவீனமயமாக்குதல், ஒருங்கிணைத்தல், போதிய குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சிறப்புத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தப்பட வேண்டும்.


விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட பிற துல்லிய பண்ணை சார்ந்த திட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நீர்ப்பாசனப் பரப்பை அதிகப்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


முக்கியப் பயிர்களான நெல் போன்றவற்றின் உற்பத்தித் திறனை வட்டார வாரியாக ஆராய்ந்து, திட்டம் வகுத்து, அதிகபட்ச உற்பத்தித் திறனை எட்ட தொடர் நடவடிக்கைகள் எடுக்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: