22 January 2011

தமிழகம் முழுவதும் நாளை முதல் போலியோ சொட்டு மருந்து!


Polio Dropsசென்னை: 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்து 399 சிறப்பு மையங்கள் செயல்படும்.

போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் தவணையாக ஜனவரி 23-ம் தேதியும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 27-ம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாம் நாள்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளிலும் முகாம் நாள்களின்போது இலவசமாக சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பணியில் 2 லட்சம் பேர்

பல்வேறு அரசுத் துறைகள், அரிமா சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர்.

சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட உடன் குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த நாள்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.

சென்னையில் 5000 பேர்

சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் சொட்டு மருந்தின் மூலம் பயன் பெறுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், சொட்டு மருந்து மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பொருட்காட்சி அரங்கம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மெரீனா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, புறநகர் பஸ் நிலையங்களில் 24 மணி நேர நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் என மொத்தம் 1,126 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். சென்னையில் மட்டும் சுமார் 5,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

No comments: