காஞ்சிபுரம் அருகே, படிப்பறிவு இல்லாத ஊராட்சி தலைவர் பதவிக் காலம் முடிய உள்ளதால், ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது வளத்தோட்டம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வளத்தோட்டம், கமூகம்பள்ளம், வளத்தோட்டம் காலனி, திருவள்ளுவர் குடியிருப்பு ஆகிய பகுதிகள் உள்ளன.
இந்த ஊராட்சியின் தலைவர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பழங்குடியின வகுப்பை (எஸ்.டி., பிரிவு) சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.இருளர் சமூகத்தைச் சேர்ந்த 16 குடும்பத்தினரில் வாசு (33) என்பவர் தேர்தலில் நின்றார். அவருக்கு ஊராட்சியில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்ததால், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்பறிவு இல்லாத வாசுவிற்கு, கையெழுத்து மட்டுமே போடத் தெரியும்.அவரை தேர்தலில் நிறுத்தியவர் வாசுவின் அறியாமையைப் பயன்படுத்தி தலைவர் போல் செயல்படத் துவங்கினார்.ஊராட்சியில் முறைகேடுகள் நடக்க துவங்கியதை அடுத்து, வாசு தன்னை தேர்தலில் நிறுத்தியவர் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறினார்.அதன்பின், ஊராட்சிப் பணிகளை கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் ஊராட்சி உதவியாளர் லோகநாதன் மேற்கொண்டார். அவர் காட்டிய இடங்களில் வாசு கையெழுத்திட்டார். ஊராட்சியில் எந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூடத் தெரியாமல் இருந்தார்.
ஊராட்சித் தலைவ ராவதற்கு முன்பாக வாசு நெசவுத் தொழில் செய்து வந்தார். முதலாளி ஒருவரிடம் கூலிக்கு நெசவு செய்தார். அதன்பின் தொழில் நசிவு காரணமாக வேலைக்கு செல்லவில்லை. அவருக்கு பயணப் படியாக ஊராட்சி சார்பில் மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது.அவரது மனைவி பச்சையம்மாள். கூலி வேலை செய்து வந்தார். இவர்களின் மகன் கார்த்திக் ஒன்பதாம் வகுப்பு, மகள் நந்தினி ஆறாம் வகுப்பு, ராஜேஸ்வரி முதல் வகுப்பு படிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு முன் நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.கூலி வேலை செய்து வந்த பச்சையம்மாள், நான்காவது குழந்தை பிறந்த பின் வேலைக்குச் செல்லவில்லை. இதனால், வீட்டில் சாப்பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் ஊராட்சித் தலைவரான வாசு, காஞ்சி புரம் காந்தி ரோட்டில், ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு சாப்பிட்டவர்களின் தட்டுகளை எடுப்பது, டேபிளை சுத்தம் செய்வது போன்ற பணியை செய்து வருகிறார்.கமூகம் பள்ளத்தில் ஓலைக் குடிசையில் வசித்து வருகிறார். அவரது குடிசைக்கு பின்னால் கான்கிரீட் வீடு முழுமை பெறாமல் உள்ளது. வீடு குறித்து கேட்ட போது, வாசுவின் மனைவி பச்சையம்மாள், ஊராட்சி கிளார்க் எங்களுக்காககட்டுகிறார் என்றார்.
ஊராட்சி உதவியாளரான லோகநாதன் கூறியதாவது:ஊராட்சித் தலைவருக்கு மாதம் 500 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. ஊராட்சியில் 2006-07ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.அரசு வழங்கிய 20 லட்ச ரூபாயில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில் ஊராட்சித் தலைவர் வேலை செய்ய முடியாது. தொகுப்பு வீடு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றில் ஊராட்சித் தலைவர் பயனாளியாக முடியாது. எனவே, அவருக்கு வீடு எதுவும் ஒதுக்கப்படவில்லை.அவர் சொந்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து வீடு கட்டுகிறார். பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்றார். அவருடனிருந்த வாசு அவர் கூறியதை வழிமொழிந்தார்.மாதம் 500 ரூபாயில் எப்படி குடும்பம் நடத்த முடிந்தது என்ற கேள்விக்கு பதில் அளிக்க இருவரும் தடுமாறினர். அனைத்து தரப்பு மக்களும் உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து ராஜ் திட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால், விவரம் தெரியாதவர்கள் தலைவராகும் போது, சிலர் அவர்களை கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் தலைவராக செயல்படுகின்றனர். ஊராட்சியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூட அறியாமல் தலைவர் பதவிக் காலத்தை முடிக்க உள்ளார் வாசு.
No comments:
Post a Comment