அந்தக் கிராமம் முழுக்க வீடுகளில் கதவுகளே கிடையாது. காரணம், கிராமத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் சனி பகவான் ஆலயம். இந்தக் கிராமத்தில் இதுவரை ஒரு திருட்டு சம்பவம் கூட நடந்தது கிடையாது. இப்போது இந்தக் கிராமத்தில் பூட்டே இல்லாமல் ஒரு வங்கியையும் திறந்துள்ளனர் -மக்களையும், கடவுளையும் நம்பி.
இந்த வித்தியாசமான கிராமம் உள்ளது மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில், சனி ஷிங்கானபூரில். இந்தக் கிராமத்தின் முக்கிய தெய்வமே சனி பகவான்தான். இங்குள்ள கோவில் மீது இக்கிராம மக்கள் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தினரும் மிகுந்த பக்தி உடையவர்கள்.
சனி பகவான் தங்களது கிராமத்தைக் காப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக இந்த ஊரில் வீடுகளில் கதவுகளே இல்லாமல்தான் வீடு கட்டுகின்றனர். இப்படி இருந்தாலும் கூட இதுவரை ஒரு திருட்டுச் சம்பவம் கூட நடந்ததில்லையாம். காரணம், திருடர்கள் எங்கு கைவரிசை காட்டினாலும் இந்தக் கிராமத்திற்கு மட்டும் தலை வைத்துப் படுக்க மாட்டார்களாம்.
பல காலமாக இந்த வழக்கம் இங்கு பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், இக்கிராமத்தில் தற்போது யூகோ வங்கி தனது கிளையைத் திறந்துள்ளது. கிராமத்து வழக்கத்தை மதித்து, தங்களது வங்கிக்கு பூட்டே இல்லாமல் கிளையை நிர்மானித்துள்ளனர்.
சனி கோவிலுக்கு தினசரி 5000 பக்தர்கள் வரை வருவது வழக்கம். வார இறுதி நாட்களில் லடசம் பேர் வரை வருகிறார்கள்.
பூட்டே இல்லாமல் கிளையை அமைத்தது குறித்து வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஷிங்கானபூர் கிராம மக்களின் பொது நம்பிக்கையை நாங்கள் மீற விரும்பவில்லை. அதை மதிக்கிறோம். இந்தக் கிராமத்தில் இதுவரை ஒரு திருட்டு கூட நடந்ததில்லை. கதவுகளே இல்லாமல்தான் இங்கு வீடுகள் கட்டப்படுகின்றன. எனவேதான் இந்தக் கிராமத்து மக்களை நம்பி பூட்டே இல்லாமல் வங்கிக் கிளையை அமைத்துள்ளோம் என்றார்.
இங்கு இதுவரை ஒரு வங்கியின் கிளை கூட இல்லை. பல வங்கிகளை ஊர் மக்கள் அணுகியும், அவர்கள் ஊர் பழக்கத்தை கேள்விப்பட்டு கிளை திறக்க முன்வரவில்லை. ஆனால் யூகோ வங்கி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கிளையைத் திறந்துள்ளதாக ஊர் மக்கள் பாராட்டிக் கூறுகின்றனர்.
இந்த வித்தியாசமான கிராமத்தில் திறக்கப்பட்டிருக்கும் யூகோ வங்கிக் கிளையில் கதவுகள் உள்ளன. ஆனால் அது பூட்டப்படாது. திறந்தே இருக்கும். வங்கியில் உள்ள லாக்கர்களுக்கும், முக்கிய ஆவணங்களுக்கும் தேவையான பாதுகாப்பை வங்கி நிர்வாகம் செய்துள்ளதாம். விரைவில் கோவிலுக்கு அருகே ஒரு ஏடிஎம் மையத்தையும் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
வங்கி இப்படி தைரியமாக பூட்டே இல்லாமல் கிளையைத் திறந்துள்ள போதிலும், அங்குள்ள போலீஸார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எங்கு பார்த்தாலும் வங்கிக் கொள்ளையாக இருக்கிறது. பலத்த பாதுகாப்பு இருக்கும்போதே திருடர்களுக்கு வசதியாக உள்ளது. ஆனால் இப்படி பூட்டே இல்லாமல் வங்கிக் கிளையைத் திறந்திருப்பது சரியல்ல. இது பாதுகாப்பற்றது. மேலும் இது விதி மீறலாகும். இதுகுறித்து மாநில டிஜிபி, ரிசர்வ் வங்கிக்குக் கடிதம் எழுதியுள்ளோம் என்கின்றனர்.
No comments:
Post a Comment