22 January 2011

34 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தந்தையும், மகனும் இணைந்தனர் .


திருவள்ளூர் : ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது தந்தையை பிரிந்த மகன், 34 ஆண்டுகளுக்குப் பின் நேற்று இணைந்தார்.ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் அடுத்த வஜ்ரகரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகன்கள். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நாராயணப்பாவுக்கு, 26 வயது ஆன போது, மன நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அப்போது அவருக்கு, சின்ன ஆஞ்சநேயலு என்ற பெயரில், ஐந்து மாத கைக்குழந்தை இருந்தது. 1977ம் ஆண்டு பெங்களூருவில் திடீரென மாயமான நாராயணப்பா, 32 ஆண்டுகளுக்குப் பின், 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது அவரை போலீசார் பிடித்தனர்.அவர் மீது பிச்சை எடுப்போர் தடுப்புச் சட்டம் 1945ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2ல் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை மாஜிஸ்திரேட் விசாரித்து, அவரை ஓராண்டு அரசு மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து தண்டனையை அனுபவிக்கவேண்டும் என உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மேல்பாக்கம் கிராமத்தில் செயல்படும் அரசு மறுவாழ்வு இல்லத்தில், நாராயணப்பா, தண்டனையை அனுபவித்தார். அங்கிருந்து 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம்தேதி விடுதலையான அவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.



இதுகுறித்து தகவல் அறிந்ததும், கலெக்டர் டி.பி.ராஜேஷ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி ஆகியோர் நடவடிக்கையின் பயனாக, திருநிலை கிராமத்தில் செயல்படும் அன்பகம் மனநல காப்பகத்தில், நாராயணப்பா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ வசதி ஆகியவை செய்து தரப்பட்டது.சிகிச்சையின் பயனாக அவருக்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பின. அவரிடம் மனநல காப்பக ஊழியர்கள் விசாரித்து, பல்வேறு தகவல்களை திரட்டினர். ஊழியர்கள், அவரது சொந்த ஊரான வஜ்ரகரூர் கிராமத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையின் பயனாக, நாராயணப்பா குடும்பத்தினரை அவர்கள் சந்தித்து விவரங்களை தெரிவித்தனர்.சிகிச்சைக்காக பெங்களூரு சென்றபோது மாயமாகி விட்ட நாராயணப்பா, 34 ஆண்டுகளுக்குப் பின் தனது குடும்பத்தாரை சந்திக்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது தந்தையை பிரிந்த சின்ன ஆஞ்சநேயலு, தந்தையை கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் அவரை கட்டித் தழுவினார்.



அவரை மதுரையில் போலீசார் பிடித்தபோது, ஒன்றன் மீது ஒன்றாக நான்கு சட்டைகளை அணிந்திருந்தார். அவற்றை போலீசார் கழற்றி பரிசோதித்தபோது அதில் நிறைய ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவ்வாறு 11 ஆயிரத்து 21 ரூபாய் இருந்தது. அவற்றை பத்திரமாக வைத்திருந்த போலீசார், அவர் விடுதலையானதும் அவற்றையும் காப்பகத்தாரிடம் ஒப்படைத்தனர்.தற்போது கலெக்டர் அத்தொகையையும், மேலும் அவருக்குத் தேவையான சட்டைகள், கைலி, பெட்ஷீட், உணவுக்கான தட்டு, டம்ளர் போன்ற பல்வேறு பொருட்களையும் வழங்கினார். மனநல காப்பகமான அன்பகத்தின் செயல்பாடுகளை கலெக்டர் வெகுவாக பாராட்டினார்.நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.


No comments: