10 January 2011

2 வயதில் பெல்ஜியம் சென்றவர் 41 ஆண்டுக்கு பிறகு தாயுடன் இணைந்தார்.

சிதம்பரம்:பெல்ஜியம் நாட்டு தம்பதியினருக்கு தத்துப்பிள்ளையாக சென்றவர், 41 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை கண்டுபிடித்து, அவருடன் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (63). திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவரை இழந்ததால் வறுமையில் வாடிய அவர், காரைக்காலில் உள்ள கிறிஸ்தவ மிஷன் ஒன்றில் தனது பெயரை சோபியாமேரி என மாற்றிக் கொண்டு பணிபுரிந்தார்.அங்கு, 1968ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அனிதா என்ற அக்குழந்தையை வளர்க்க முடியாமல், புதுச்சேரி காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.

அனிதாவிற்கு இரண்டு வயதான போது, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் அனிதாவை தத்தெடுத்து ஜாஸ்மின் என பெயர் மாற்றம் செய்து பெல்ஜியத்தில் வளர்த்தனர். தற்போது 43 வயதாகும் ஜாஸ்மினுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.புதுச்சேரியில் இருந்து, தான் தத்தெடுக்கப்பட்ட விவரம், தன்னை வளர்த்தவர்கள் மூலம் ஜாஸ்மினுக்கு சமீபத்தில் தெரிந்தது. இதையடுத்து, தனது தாயைப் பார்க்க அவர் ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கினார்.

காரைக்காலில் அவரது பிறப்புப் சான்று கிடைத்தது. உடன், தனது கணவர் பிலிப்”டன் கடந்த வாரம் புதுச்சேரியில் தான் வளர்ந்த குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று விசாரித்தார். அதில், சோபியாமேரி காட்டுமன்னார்கோவிலில் இருப்பதாக தெரிவித்தனர். அங்கு "சர்ச்'சில் விசாரித்த போது, புதுத்தெருவில் அவரது தம்பி வீட்டில் வசிப்பதாக தகவல் கிடைத்தது.உடனே அங்கு சென்று, தாய் சரஸ்வதி என்கிற சோபியாமேரியை சந்தித்தார். 41 ஆண்டுகள் கழித்து பிறந்த நாள் அன்று தன் தாயை பார்த்த மகிழ்ச்சியில் ஜாஸ்மினும், மகளைப் பார்த்த சந்தோஷத்தில் தாயும் கண்ணீர் மல்க கட்டி தழுவிக் கொண்டனர். ஜாஸ்மின் தனது பிறந்த நாளை தனது தாயுடன் கொண்டாடினார். தாய் பேசும் மொழி மகளுக்கும், மகள் பேசுவது தாய்க்கும் புரியாமல் செய்கை மூலம் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டது, அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

No comments: