12 January 2011

ஏழை இந்தியர்களுக்காக வீடுகள் கட்டித் தர இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் திட்டம்

Prince Charlesலண்டன்: பெங்களூர் அல்லது கொல்கத்தாவுக்கு அருகே மினி பாலைவனச் சோலை போல ஏழை இந்தியர்களுக்காக பிரத்யேகமான ஒரு நகரியத்தை அமைக்க இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் திட்டமிட்டுள்ளாராம்.

பாலைவனத்தில் ஆங்காங்கே இருக்கும் சோலைவனம் போல, இந்தத் திட்டம் இருக்கும் என்கிறது சார்லஸின் நல அறக்கட்டளை.

இங்கிலாந்தில் டோர்சர் மாடல் கிராமம் என்ற பெயரில் சார்லஸ் ஒரு நகரியத்தை அமைத்துள்ளார். ஏழைகளுக்கான கிராமம் இது. அதேபோல இந்தியாவில் குடிசைகளில் வசிக்கும் ஏழைகளுக்காக ஒரு திட்டத்தை அவர் யோசித்து வருகிறாராம்.

பெங்களூர் அல்லது கொல்கத்தா அருகே இது அமையுமாம். இங்கு 15,000 பேர் வரை தங்கக் கூடிய வகையில் வீடுகள் கட்டித் தரப்படும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் இந்த வீடுகள் உள்ளிட்டவை கட்டப்படும். இந்த இடத்தில் பள்ளிக்கூடங்கள், கடைகள், 3000 வீடுகள் இடம் பெறுமாம்.

14 கால்பந்து மைதானங்களின் மொத்த அளவில் இந்த மாடல் கிராமம் இருக்குமாம். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைப் பார்த்து விட்டு இந்தியாவின் ஏழைச் சமுதாயம் மீது கவலை பிறந்துள்ளதாம் சார்லஸுக்கு. இதனால்தான் இந்தத் திட்டத்தை அவர் வகுத்துள்ளாராம். இந்த செய்தியை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக மும்பையில் விரைவில், சார்லஸின் அறக்கட்டளை கிளை அலுவலகம் ஒன்றைத் திறக்கவுள்ளதாம்.

No comments: