13 January 2011

இன்போஸிஸ் நிகர லாபம் 14.17 சதவீதம் உயர்வு!

Infosysபெங்களூர்: மூன்றாவது காலாண்டில் இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 14.17 சதவீதம் அதிகரித்து ரூ.1780 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 1559 கோடியாக இருந்தது நிகர வருமானம்.

மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள விவரக் குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது இன்போஸிஸ்.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 23.77 சதவீதம் அதிகரித்து ரூ.7106 கோடியாக உள்ளது. இதனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு வருமானம் ரூ.7157 லிருந்து ரூ.7230 கோடியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டின் மொத்த வருமானம் ரூ.27,408 லிருந்து ரூ.27,481 கோடியாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்போஸிஸ் நிர்வாக இயக்குநர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "வளர்ந்த நாடுகளில் இன்னும் பொருளாதாரம் எதிர்ப்பார்த்த மாதிரி மீட்சியடையவில்லை. எனவே இங்குள்ள எங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் நோக்கில், புதிய ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்," என்றார்.

இதற்கிடையே ஆர் சேஷசாயி என்பவரை நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக நியமித்துள்ளது இன்போஸிஸ்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று இன்போஸிஸ் பங்குகள் 3.23 சதவீதம் குறைந்து ரூ 3,266.00 க்கு கைமாறியது.

No comments: