22 January 2011

புலிகள்-முஸ்லிம்கள் முரண்பாடு - கடந்தகால தவறுகளை மன்னித்து விடுங்கள்! சீமான் உருக்கம்!


சமீபகாலமாக தமிழகத்தில் பெரும் சக்தியாக வலுப்பெற்று வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்! ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட காவி பயங்கரவாதிகளை தீவிரமாக எதிர்க்கும் சீமான் ஒரு பெரியார் தொண்டர் ஆவார்.

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும், சிங்களவர் களுக்கு எதிராகவும் கடுமையாகப் பேசினார் என்று குற்றம் சாட்டி, தமிழக அரசு அவரை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது.

தமுமுக உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்களும், மாற்று அரசியலை முன்னிறுத்தும் மமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அவரது கைதைக் கண்டித்து எழுதியும், பேசியும் வந்தன.

சமீபத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை முறியடித்து விடுதலையான சீமான், தனது வெற்றிக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வைகோ அவர்களை சந்தித்தார். அதன் பிறகு ஜனவரி 12 அன்று தமுமுக அலுவலகம் வந்தார். அவருடன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது, இயக்குனர் புகழேந்தி மற்றும் அவரது கட்சியின் முன்னணியினரும் வருகைத் தந்தனர். அவர்களுக்கு தமுமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிறகு நடைபெற்ற தனி சந்திப்பில், தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி, மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, துணைப்பொதுச் செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி, மமக துணைப் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மமக அமைப்பு செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுலாபுதீன், தமுமுக துணைச் செயலாளர் கோவை. சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தனது விடுதலைக்கு குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்ட சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுக போட்டி யிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும், மமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

இச்சந்திப்பில் நடப்பு தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசிய துடன், மிக முக்கியமாக இலங்கை தமிழர் விவகாரம் குறித்தும் பேசப் பட்டது.

அப்போது இலங்கையில் தமிழர்களுக்கும்  தமிழ்பேசும் முஸ்லிம் களுக்குமிடையில் நிலவும் இடைவெளி குறித்தும், புலிகளின் கடந்த கால கசப்பான சில அணுகுமுறைகள் குறித்தும் தமுமுக தலைவர் பேராசி ரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் சீமானிடம் விவரித்தார்.

அது குறித்து மிகவும் வருந்தி பேசிய சீமான், அது நடந்திருக்கக் கூடாது என்றும், இது குறித்து தான் பிரபாகரனிடம் முறையிட்டதையும் எடுத்துக் கூறினார். இப்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டு, ஈழத் தமிழர்கள் சோகமான நிலையில் உள்ளனர். தமிழர்களை ஒடுக்கியவர்கள் இப்போது முஸ்லிம் தொழிலதிபர்களையும், அவர் களது வணிகத்தையும் குறிவைத் திருப்பதையும், சிங்கள பேரினவாதத் தின் எதிர்கால அபாயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பகிர்ந்துக் கொள்ளப் பட்டது.

இனி இரு தரப்பிலும் நிகழ்ந்த கடந்தகால கசப்புகளை பெருந்தன் மையோடு மறந்துவிட்டு, அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும், இது குறித்து இலங்கை முஸ்லிம் தலைமைகளையும், ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் நமது முன்னிலையில் சந்திக்க வைத்து புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதனிடையே ஜனவரி 16 அன்று திருச்சியில் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற கருத்தரங்கில் சீமானும் அழைக் கப்பட்டிருந்தார்.

அதில் பேசிய சீமான், “கடந்த காலத்தில் புலிகள்&முஸ்லிம்கள் இருதரப்பிலும் தவறுகள் நடந்துள் ளன. புலிகள் சார்பில் நடைபெற்ற தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மறந்துவிடுங்கள். அதை மன்னித்து விடுங்கள். புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையு டையவர்களாக இருந்திருந்தால் நானும், அண்ணன் கொளத்தூர் மணியும் புலிகளை ஆதரித்திருக்கவே மாட்டோம் என்று பகிரங்கமாகப் பேசியதும், அரங்கமே அதை வரவேற்று ஆதரித்தது.

அடுத்துப் பேசிய மமக துணைப்பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, சீமானின் பேச்சை சுட்டிக்காட்டி மன்னிக்கும் மனப்பான்மை முஸ்லிம்களின் குணம் என்றும், ஒருவர் மீது உங்களுக்கு இருக்கும் கோபம், அவர்களின் நியாயங்களை நிராகரிப்பதாக இருக்கக்கூடாது என்ற குர்ஆன் வசனத்தை (5:8) சூரத்துல்மாயிதா) சுட்டிக்காட்டி இன்று ஈழத்தில் அம்மக்களின் துன்பத்தை எண்ணிப்பார்த்து அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை என்றார். மேலும், சீமான் அவர்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டபிறகு, நடந்துவிட்ட பழைய துயரங்களை இரு தரப்புமே பெருந்தன்மையாக மறந்துவிட்டு, அடுத்தக் கட்டத்தை நோக்கி ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் பேசினார்.

இருவரின் பேச்சும் அரங்கத்தில் கூடியிருந்த அனைவரையும் சிந்திக்க வைத்தது. இது குறித்து ஆரோக்கியமான மன மாற்றம் எழும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

பாலஸ்தீனத்தில் அநீதி நடக்கும்போதும், காஷ்மீரில் அநீதி நடக்கும்போதும், குஜராத்தில் அநீதி நடக்கும்போதும் நம்மோடு  இணைந்து போராடும் நமது தோழர்களுக்கு, அவர்கள் முன்னெடுக்கும் நியாயமான பிரச்சனைகளில் குரல் கொடுப்பது நமது கடமையாகும். அப்பாவிகள் எங்கு கொல்லப்பட்டாலும், எங்கு துன்புறுத்தப்பட்டாலும் அவர்களுக்காக இஸ்லாம் குரல் கொடுக்கச் சொல்கிறது. எதிரிகள் பேச்சுவார்த்தைக்கும், சமாதானத்திற்கும் முன் வந்தால் இஸ்லாம்அதை ஏற்றுக் கொள்கிறது.

இதையெல்லாம் தமிழக முஸ்லிம்களும், இலங்கை முஸ்லிம்களும் மிகுந்த நிதானத்துடன் சிந்தித்துப் பார்த்து, மனிதாபிமானத்துடன் சகோதர சமுதாய மக்களின் துன்பங்களைப் போக்கவும், குரல் கொடுக்கவும் முன் வரவேண்டும்.

முஸ்லிம்கள் மன்னிக்கும் மனப்பான்மையும், தவறுகளை சரிசெய்து கொள்ளும் பக்குவமும், சமாதானத்தை விரும்பும் நிதானமும் கொண்ட வர்கள் என்பது பல்வேறு காலகட்டங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இனி என்ன செய்யப்போகிறோம்? என தமிழ் உலகம் காத்திருக்கிறது.


நன்றி - TMMK

No comments: