மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்த பெண்ணுக்கு எந்த பிரச்னை வந்தாலும், இன்சூரன்ஸ் பணம் மூலம் அவரால் சமாளிக்க முடியும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திரத் கூறினார். டெல்லியில் அமைச்சர் கிருஷ்ணா திரத் அளித்த பேட்டி: புகுந்த வீட்டில் ஏற்படும் பிரச்னைகள், துரதிர்ஷ்டவசமாக மணமகன் இறக்க நேரிடுவது போன்ற சமயங்களில் புது மணப்பெண்களுக்கு பெரும் பிரச்னையாகி விடுகிறது.
அந்த சமயத்தில் அவர்களிடம் பணமும் இருப்பதில்லை. இதுபோன்ற சிக்கலான நிலையை சமாளிக்க, அவர்களுக்கு தகுந்த நிதியுதவி கிடைக்கும் வகையில், புதிய இன்சூரன்ஸ் பாலிசியை கொண்டு வருவது குறித்து, ஆலோசித்து வருகிறோம். இந்த மாத இறுதியில் சட்ட நிபுணர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இதுதொடர்பாக பேச உள்ளேன். அதன்பின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படும். இந்த இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகமான பின்னர், பெண்ணை பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்க கூடாது. அதற்கு பதிலாக இந்த இன்சூரன்சில் பணத்தை கட்டினால் அவர்களின் மகளுக்கு உதவியாக இருக்கும். பிரச்னைகளுக்காக மட்டுமின்றி, அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுக்குபின், பெரிய தொகை கையில் கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment