20 January 2011

உலகின் இரு பெரும் வல்லரசுகளின் அதிபர்களின் சந்திப்பு.

வாஷிங்டன் : பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவுக்கு, நேற்றிரவு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரவு விருந்து அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட மிக முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
உலகின் இரு பெரும் வல்லரசுகளின் அதிபர்களின் சந்திப்பு, உலகளவில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கரன்சி கொள்கை, வர்த்தகம் மற்றும் மனித உரிமை கொள்கைகள் போன்றவை உலகளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ நான்கு நாள் சுற்றுப் பயணமாக நேற்று அமெரிக்கா வந்தடைந்தார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப் படை தளத்தில் வந்திறங்கிய அவரை, துணை அதிபர் ஜோ பிடேன் வரவேற்றார். ஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு வெள்ளை மாளிகையில் உள்ள விருந்து அறையில், ஹூவுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலன் ஆகியோரும், ஹூவுடன் இரண்டு சீன உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இது பற்றிய வேறு செய்திகளை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. ஆனால், இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலர் ராபர்ட் கிப்ஸ், "பேச்சுவார்த்தைக்கான ஒரு சிறிய முன்னேற்பாட்டை இந்த விருந்து அளிக்கும்' என்று கருத்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஒபாமா - ஹூ இடையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது, அமெரிக்க பத்திரிகையாளர்கள் தரப்பில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும், சீன பத்திரிகையாளர்கள் தரப்பில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் ஹூ பதிலளித்தார்.

இதையடுத்து, சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியை அதிகரிக்கும் விதத்திலும், அமெரிக்காவில் சீனாவின் முதலீட்டை அதிகரிக்கும் விதத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் பால்மர், கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத் தலைவர் லாய்ட் பிளாங்க்பெயின், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத் தலைவர் ஜெப் இம்மெல்ட், மோட்டாரோலா நிறுவனத் தலைவர் க்ரக் பிரவுன் மற்றும் போயிங் நிறுவனத் தலைவர் ஜிம் மெக் நெர்னே ஆகியோருடன் ஹூ மற்றும் ஒபாமா பேச உள்ளனர்.

மனித உரிமை விவகாரம்: இதற்கிடையில், ஹூவின் வருகைக்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர், சீனாவில் மனித உரிமைகளின் மோசமான நிலை குறித்து கவலை தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து ஒபாமா, ஹூவிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கடந்த வாரம் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, சீனாவில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற லியு ஷியாபோ உள்ளிட்ட அரசியல் கைதிகளை, அந்நாட்டு அரசு விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேநேரம், சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் தலைவர் லியோனார்ட் லியோ நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, "சீனாவில் மத சுதந்திரம் அளிக்க அந்நாட்டு அரசு தயங்குவது பற்றியும் ஹூவிடம் பேச வேண்டும் என அதிபரை வலியுறுத்துகிறோம்' என்றார். கடந்த வாரம், ஹூவின் வருகையை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள சீன நிபுணர்கள் மற்றும் சீன மனித உரிமை ஆர்வலர்களைச் சந்தித்த ஒபாமா, ஹூ உடனான பேச்சுவார்த்தையில் மனித உரிமைகள் மற்றும் சீனாவில் கட்டுப்படுத்தப்படும் மதச் சுதந்திரம் ஆகியவை முக்கிய இடம் பெறும் என உறுதியளித்திருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலர் ராபர்ட் கிப்ஸ், "பேச்சுவார்த்தையில் கடினமான எந்த ஒரு பிரச்னையையும் தவிர்க்க வேண்டும் என்பது ஒபாமாவின் நோக்கமல்ல. பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும்' என்றார். ஆனால், அமெரிக்காவைத் தாண்டி சீனா முன்னேற்றம் பெறும் வகையில் எவ்வித திட்டங்களும் ஏற்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது

No comments: