ஒரு கிலோ ரேஷன் அரிசியை விட, ஒரு கிலோ மணல் விலை அதிகரித்துள்ளது, கான்ட்ராக்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணல் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக, தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் அரசின் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், அரசின் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மக்கள் வீடு கட்டுவதற்கு என, அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் திருச்சி, கரூர் காவிரியாற்றுப்படுகை மற்றம் பாலாற்றில் இருந்து தான் மணல் சப்ளை செய்யப்பட்டது. காவிரியில் பொக்லைன் மூலம் மணல் அள்ளக் கூடாது; ஆட்கள் மூலமே அள்ள வேண்டும் என்ற பிரச்னை எழுந்ததால், கடந்த மாதம் மணல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதன்பின் மிகக் குறைந்த இயந்திரங்கள் மூலமே, மணல் அள்ளப்படுவதால், முழுமையாக மணல் சப்ளை செய்ய முடியவில்லை. மேலும், பாலாற்றில் மணல் அள்ள தடை விதித்ததால், சென்னை மாநகர கட்டுமானப் பணிக்கும், காவிரியாற்றில் இருந்து தான் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால், தமிழகம் முழுவதும் ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு சார்பில் மாநிலம் முழுவதும், கான்கிரீட் ரோடு போடும் பணி, கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில், வீடு கட்டும் பணி, பிற கட்டட கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 1,000 கோடி ரூபாய் செலவில் அனைத்து உள்ளாட்சிகளும் தார் ரோடு, கான்கிரீட் ரோடு போட அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி, மாநிலம் முழுவதும் கான்கிரீட் ரோடு போடும் பணி துவங்கியது. பல இடங்களில் சாலைகளை, கொத்தி போட்ட நிலையில், மணல் கிடைக்காததால் கான்கிரீட் போட முடியவில்லை. முன்பு ஒரு யூனிட் மணல், 3,000 ரூபாய்க்கு கிடைத்து. தற்போது ஒரு யூனிட் மணல், 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து, நான்கு யூனிட் மணல், மேட்டூர் கொண்டு வர, 28,000 ரூபாய் செலவாகிறது. ஒரு யூனிட் என்பது, 4.5 டன் மணல்; அதை கணக்கிடுகையில் ஒரு கிலோ மணலுக்கு, 1 முதல் 1.25 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ரேஷன் கடையில் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு விற்கும் நிலையில், கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தும் மணல், ரேஷன் அரிசியை விட கூடுதல் விலைக்கு விற்பது அதிர்ச்சியாக உள்ளது. அரசு கட்டுமானப் பணிக்கு, ஒரு யூனிட் மணலுக்கு, 1,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment