13 May 2011

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!


சென்னை: திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வடிவேலு என்றால் அது நிச்சயம் மிகையாகாது. அந்த அளவுக்கு வடிவேலுவின் வாய்தான் திமுகவுக்கு இயல்பாக வந்திருக்கக் கூடிய ஓட்டுக்களையம், அதிமுக, தேமுதிக பக்கம் திருப்பி விட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவின் அரசியல் வரலாறு மிகப் பெரியது. எத்தனையோ பெரும் தலைவர்களைக் கண்ட இயக்கம் அது. அன்பழகன் என்ற நாவுக்கரசர் நடமாடும் கட்சி இது. அதேபோல நெடுஞ்செழியன் என்ற மாபெரும் பேச்சாளரைக் கண்ட இயக்கம் இது. மண்ணை நாராயணசாமி, கே.ஏ.மதியகழன் என்று பல பேச்சுப் பொறியாளர்களைக் கொண்ட இயக்கம் இது.

ஆனால் இன்று நடந்தது என்ன வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி ஜெயலலிதாவையும், விஜயகாந்த்தையும் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது திமுக. இது திமுகவினருக்கே கூட நிச்சயம் அதிருப்திதான். இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இருந்த அவர்களுக்கு வடிவேலுவின் பேச்சு ரசிப்புக்குரியதாக, மிகப் பெரிய விஷயமாக அப்போது தோன்றியது.ஆனால் இன்று நடந்துள்ளதைப் பார்த்தால் வடிவேலு அப்படிப் பேசாமல் இருந்திருந்தால் திமுக இவ்வளவு கேவலப்பட்டிருக்காது.

வடிவேலு பேசியது சாதாரணப் பேச்சா. நான்கு சுவர்களுக்குள் கூட யாரும் இப்படி நாராசமாக பேச மாட்டார்கள். விஜயகாந்த்தை அவர் பொது இடங்களில் வாய் வலிக்க வலிக்க விமர்சித்துப் பேசியது நிச்சயம், தேமுதிகவுக்கு அனுதாப ஓட்டுக்களாகப் போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

திமுக ஆட்சியின் நிறைகளை பற்றி மட்டுமே வடிவேலு பேசியிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. ஆனால் விஜயகாந்த்தை அவன் இவன் என்றும், லூசுப் பயல் என்றும், கேஸு என்றும், பீஸு என்றும், குடிகாரன் என்றும் தாறுமாறாக வடிவேலு பேசியது பொதுமக்களிடையே விஜயகாந்த் மீதான ஒருவித அனுதாபத்தை ஏற்படுத்தி விட்டது.

மேலும் வடிவேலுவின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் விஜயகாந்த்தும் சரி, தேமுதிகவினரும் சரி பொருட்படுத்தவே இல்லை. இது திமுகவுக்கு சற்று அதிர்ச்சிதான். காரணம், வடிவேலு ஏதாவது பேசி, அதற்கு தேமுகவினர் பதிலடி கொடுத்தால் அது எந்தவிதத்திலாவது தங்களுக்கு சாதகமாக மாறாதா என்ற எண்ணம் திமுகவிடம் இருந்தது.

ஆனால் விஜயகாந்த்தோ வடிவேலு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, தன் மீது விழுந்த வசவுகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து திமுக அரசின் குறைகளைப் பற்றி மட்டுமே மக்களிடம் ஹைலைட் செய்து பேசி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

வடிவேலுவுக்கு எதிராக போட்டிப் பிரசார பீரங்கியாக நடிகர் சிங்கமுத்து களம் இறக்கப்பட்டார். சரி, வடிவேலுவைப் போல இவரும் அசிங்கமாகப் பேசப் போகிறார் என்று பார்த்தால், அவ்வளவு அழகான பிரசாரத்தை மேற்கொண்டார் சிங்கமுத்து.

திமுக அரசின் குறைகளையும், அதிமுக தேர்தல் அறிக்கையின் நிறைகளையும் அவ்வளவு அழகாக, எளிய வார்த்தைகளில் மக்களிடம் எடுத்துக் கூறி அழகாக வாக்கு சேகரித்தார் சிங்கமுத்து. மேலும் வடிவேலுவைப் பற்றிப் பேசுவதே அசிங்கம் என்று கூறி வடிவேலுவின் இமேஜை டேமேஜ் செய்தார்.

வடிவேலுவின் வாய்த் துடுக்கும், அவரது தேவையில்லாத பிரசாரமும், திமுகவுக்கு நல்லது செய்ததை விட படு பாதகத்தையே செய்துள்ளது என்பதை தேர்தல் முடிவு தெளிவாக விளக்குகிறது.

ஒரு படத்தில் நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே என்று வடிவேலுவை திட்டுவார் சிங்கமுத்து. உண்மையிலும் அப்படித்தான் ஆகியுள்ளது. அரசியலுக்கெல்லாம் வடிவேலு சரிப்பட்டு வர மாட்டார். உலகத் தமிழர்களை சிரிக்க வைக்கும் வேலையில் மட்டும் அவர் தீவிரமாக கவனம் செலுத்துவதே, இத்தனை காலம் கஷ்டப்பட்டு அவர் சேர்த்து வைத்திருக்கும் நல்ல காமெடி நடிகர் என்ற பெயருக்கு கெளரவம் சேர்ப்பதாக அமையும்.

ஒரு நல்ல நடிகராக, காமெடியனாக, மனிதராக வடிவேலுவை தங்களது இதயத்தில் வைத்திருந்தனர் மக்கள். ஆனால் அரசியல் சாக்கடையில் சிக்கி அதைக் கெடுத்துக் கொண்டுவிட்டார் வடிவேலு என்பதே உண்மை.

No comments: