04 May 2011

'நண்பன்' ஒசாமாவை உருவாக்கி, 'எதிரி' ஒசாமாவை அழித்த அமெரிக்கா!




வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் வீழ்த்தப்பட்டு விட்டார். ஒரு பயங்கர தீவிரவாதியை அமெரிக்கா வீழ்த்தி விட்டது. ஆனால் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால், ஒரு காலத்தில் இதே பின்லேடன் எந்த அளவுக்கு அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது தெரிய வரும், கூடவே ஆச்சரியமும் சேர்ந்து வரும்.

உலகிலேயே பெரும் விலை வைக்கப்பட்ட தீவிரவாதி பின்லேடன்தான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது அமெரிக்கா. அப்படிப்பட்ட லேடனை, அப்போத்தாபாத்தில் வைத்து வீழ்த்தி விட்டது அமெரிக்கா.

சரி இப்போது கடந்த காலத்தை 'ரீவைண்ட்' செய்வோம்...

1979ம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்தார் செளதி அரேபியாவின் பெரும் செல்வந்தரான பின்லேடன். படிப்பை முடித்த சூட்டோடு, ஆப்கானிஸ்தானில் எழுந்த சோவியத் ஊடுறுவலுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்தார் பின்லேடன். அந்தப் போராட்டத்திற்கு பின்புலமாக இருந்து முழு ஆதரவையும் அப்போது கொடுத்தது அமெரிக்காவின் சிஐஏ.
1979 முதல் 1989ம் ஆண்டு வரை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க அதிபர்களாக இருந்த ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகன் ஆகியோரின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவின் கீழ் நடந்து வந்த அந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயுதம், நிதியுதவி உள்ளிட்டவற்றைக் கொடுத்து ஆதரித்து தூண்டி விட்டு வந்தது அமெரிக்கா.

அந்தப் போராட்டத்தின்போது, பின்லேடன் தனது தலைமையில் ஆப்கானிஸ்தானிலிருந்தபடி இஸ்லாமிய ஜிஹாத் முஜாஹிதின் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த அமைப்புக்குத் தேவையான பயிற்சிகளையும், ஆயுத உதவிகளையும் அமெரிக்காதான் முழுமையாக அளித்தது.

அதாவது பின்லேடனை ஆயுதப் போராட்டத்தில் திறம்பட செயல்பட பயிற்சி கொடு்ததது அமெரிக்கா. எப்படி நவீன ஆயுதங்களைக் கையாள்வது, எதிரிகளை எப்படி அழிப்பது உள்ளிட்ட பால பாடங்களை சொல்லிக் கொடுத்தது அமெரிக்கா.

ஆபரேஷன் சைக்ளோன், ரீகன் டாக்ட்ரைன் என்ற பெயர்களில் இந்த உதவிகளை அள்ளிக் கொடுத்தது அமெரிக்கா- பின்லேடன் குழுவுக்கு. அதாவது பின்லேடனை ஒரு முழுமையான போராளியாக, தீவிரவாதியாக வளர்த்து, வார்த்தெடுத்து, உருவாககியதே அமெரிக்காவின் சிஐஏ தான்.

அதை விட ஒரு படி மேலே போய், பின்லேடன் தலைமையிலான போராட்டக் குழுவினரை, ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று ரீகன் வானளாவ புகழ்ந்தார். வரலாற்றின் பக்கங்களில் இன்றளவும் அழிக்க முடியாத அளவுக்கு அது அழுத்தமாகவே பதியப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பனிப் போர் முடியும் வரையில்தான். அதன் பிறகு அமெரிக்கா பல்டி அடித்தது. ரஷ்யாவுடன் நட்பை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா. ரஷ்யாவும் 1989ல் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியது.

இதனால் பின்லேடன் தலைமையிலான குழுவினரை ஆயுததாரிகளாகப் பார்க்க ஆரம்பித்தது அமெரிக்கா. அவர்களைக் கைவிட்டது. அதாவது தனது வேலை முடிந்ததும் அப்படியே திராட்டில் விட்டுவிட்டது அமெரிக்கா. ஆனால், அதுவரை சோவியத் யூனியனுக்கு எதிராக ஆயுத போராட்டங்கள் நடத்தி வந்த பின்லேடனும் அவரது சகாக்களும், ஓயவில்லை.

தங்களை உருவாக்கிய அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பினர். அதற்கு முக்கிய காரணங்கள் 3. சோவியத் யூனியனை எதிர்க்க ஆப்கானிஸ்தானை ஒரு போர்க் களமாக பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்தவுடன் அந்த நாட்டுக்கு எந்த உதவியும் செய்யாமல் போனது, ஈராக் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பு, ஈராக் மக்களை குறிப்பாக குழந்தைதகளை மருந்து கூட கிடைக்காமல் கொடூரமாக உயிரிழ்க்கச் செய்த பொருளாதாரத் தடைகள் ஆகியவை 2 காரணங்கள்.

ஆனால், மிக முக்கியமான காரணம் பாலஸ்தீனப் பிரச்சனை. பாலஸ்தீனத்தை கைப்பற்றி, அந்த நாட்டிலேயே இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் அடிமையாக்கியதை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் தான் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கரு.

இஸ்ரேல் என்ன செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், இஸ்ரேலை தொடர்ந்து தட்டிக் கொடுத்த அமெரிக்காவுக்கு எதிராக தனது சக்தி முழுவதையும் திருப்பினார் பின்லேடன். பாலஸ்தீன மக்களை அடிமையாக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க அல்கொய்தா தீவிரவாத அமைப்பை உருவாக்கினார் பின்லேடன். இப்படித்தான் பின்லேடன் அமெரிக்காவின் எதிரியாக மாறினார்.

ஆனால், இந்த இடத்தில் தான் சிஐஏ உளவு விஷயத்தில் தனது பெரும் தோல்வியைத் தழுவியது. தங்களால் கைவிடப்பட்ட பின்லேடன் என்ன செய்கிறார் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது.

இந் நிலையில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக விளங்கிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பியது. இதற்காக ஆப்கானில்தானின் மாணவர்களை முல்லா ஒமர் தலைமையில் ஒன்று திரட்டியது ஐஎஸ்ஐ. இந்த மாணவர்களுக்கு ஆயுத பயிற்சியும் பணமும் ஆயுதங்களும் தரப்பட்டன.

இந்த மாணவர் படை தான் தலிபான் ஆக உருவெடுத்தது. சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த அதிபர் முகம்மத் நஜீபுல்லாவை இந்தப் படை எதிர்க்க ஆரம்பித்தது.

இவர் கம்யூனிஸ ஆதரவாளர் என்பதால், அவரை ஆட்சியை விட்டு விரட்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் தலிபான்களுக்கும் அமெரிக்காவும் ஆதரவு தந்தது. 1992ம் ஆண்டு தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி நஜீபுல்லாவை அடித்துக் கொலை செய்து, ஜீப்பில் உடலை கட்டி இழுத்து வந்து, காபூலில் ஒரு தெருவில் மின் கம்பத்தில் தொங்கவிட்டபோது, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா என்று தலிபான்களைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் நஜீபுல்லா காலி என்று அமெரிக்கா மட்டும் மகிழ்ச்சியில் திளைத்தது.

இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் நாடு சிக்கி சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை (லிபியாவில் கடாபியின் அடக்குமுறையை மட்டும் எதிர்ப்பார்களாம்!). ஆண்கள் கட்டாயம் தாடி வைக்க வேண்டும், தாடியை ட்ரிம் செய்தால் அடி-உதை, பெண்கள் தனியே வெளியே வந்தால் அடி, எந்தப் பெண் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் கல்லால் அடித்துக் கொல்வது என்று தலிபான்கள் வெறியாட்டம் போட்டபோதும் அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.

இப்படி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கே மிக மிக அமைதியாக தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் பின்லேடன். ஆட்சி நடத்த பணமில்லாமல் ஓட்டாண்டிகளான தலிபான்களுக்கு பணத்தைக் கொட்டிய பின்லேடன், அதற்குப் பிரதிபலனாக தனது அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதப் பயிற்சிகளை கண்டுகொள்ளக் கூடாது என்று நிபந்தனை போட்டார். இதை தலிபான்கள் ஏற்றனர்.

அல்கொய்தா மாபெரும் தீவிரவாதப் படையாக உருவெடுத்தது. உலகெங்கும் இந்தப் படைக்கு ஆள் திரட்டினார் பின்லேடன். குறிப்பாக தீவிர அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட பாலஸ்தீன இளைஞர்களை தன் பக்கம் கொண்டு வந்தார். அவர்களை வைத்து நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை பின்லேடன் தாக்கும் வரை அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்ததே மறந்து போயிருந்தது தான் உண்மை.

முதல் முறையாக சூடானில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போரை தொடங்கினார் பின்லேடன். வெகு விரைவிலையே உலகின் மிகப் பெரிய தீவிரவாதியாக மாறிப் போனார்.

வளர்த்த கடா மார்பில் பாயந்த கதையாக, நியூயார்க் இரட்டை கோபுரங்களை அமெரிக்காவின் விமானங்களைக் கொண்டே தாக்கி அழித்தார் பின்லேடன். இதுதான் அமெரிக்காவை கடும் கோபம் கொள்ளச் செய்து, கடைசியில் அப்போத்தாபாத் வரை விரட்டி வந்து பின்லேடனை வீழ்த்தி ஓய்ந்துள்ளது.
அதேபோல அமெரிக்காவின் இன்னொரு முக்கிய 'நண்பர்' சதாம் உசேன். இரக்கமற்ற சர்வாதிகாரியாக அமெரிக்காவில் வர்ணிக்கப்பட்ட சதாம், ஆரம்பத்தில் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர். ஈரான்- ஈராக் இடையே 1980 முதல் 88 வரை நடந்த எட்டு ஆண்டு காலப் போரின்போது ஈராக்குக்கு முழுத் துணையாக இருந்தது அமெரிக்கா.

1979ல் ஈரானில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளராக திகழ்ந்து வந்த மன்னர் ஷா முகம்மது ரெஸா பஹல்வி தூக்கி எறியப்பட்டார். அயத்துல்லா கொமேனி தலைமையின் கீழ் ஈரான் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈராக்கைத் தூண்டி விட்டு போரில் குதிக்க வைத்தது.

சதாம் உசேனும், அமெரிக்கா தந்த தெம்புடன்- அதன் உள்நோக்கத்தை அறியாமல்- படு உற்சாகத்துடன் ஈரானுடன் மோதினார். இதனால் சதாமுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. ஈரானும் சரி, ஈராக்கும் சரி பொருளாதார சீர்குலைவுக்குள்ளாகி, நாசமாகப் போனதுதான் மிச்சம். இத்தனைக்கும் காரணம் அமெரிக்காவின் குள்ளநரித்தனம்.

இதே சதாம் பின்னர் அமெரிக்காவின் பரம விரோதியானார். ஈரானுடன் நடந்த போரின்போது கிடைத்த புதிய தெம்பால் நாடு பிடிக்கும் ஆசைக்குத் தள்ளப்பட்ட சதாம், 1990ல் குவைத்துக்குள் ஊடுறுவினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, சதாமைக் கண்டித்தது. ஆனால் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை.

இதன் விளைவு இரண்டு முறை ஈராக்குடன் போரில் ஈடுபட்டது அமெரிக்கா. முதல் போரில் படு துணிச்சலாக அமெரிக்காவை எதிர்த்தார் சதாம். அவரது ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியதே உண்மை. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அமெரிக்கப் படையின் தாக்குதலில் சிக்கிப் பலியானார்கள். இந்த முறை சதாமுக்கு பக்கபலமாக இருந்தது ரஷ்யா. ரஷ்யாவின் ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவை துணிச்சலுடன் சந்தித்தார் சதாம்.

இரண்டாவது முறையாக நடந்த அமெரிக்க- ஈராக் போரின்போது சதாமின் ஆட்சி அகற்றப்பட்டது. 2003ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பதுங்கு குழியில் சதாம் பிடிபட்டார். 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அவரை தூக்கிலிட்டது அமெரிக்க ஆதரவு ஈராக் கோர்ட்.

இப்படி எத்தனையோ விஷயங்களில் அமெரிக்காவின் இரட்டை வேடம், சுயநலத்தை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

பின்லேடன் மிகப் பயங்கரமான தீவிரவாதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் பலரால் அமெரிக்காவுக்கு ஆபத்து இல்லை என்பதால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது அமெரிக்கா.

இப்படித்தான் 1990களில் பின்லேடனை கண்டு கொள்ளாமல் இருந்தது!

No comments: