24 May 2011

சமச்சீர் கல்வி என்பது என்ன ?

குறைந்தது 100 நாட்களுக்காவது, விமர்சனம் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது ஜெயலலிதா அரசு என்றுதான் நம்பியது. ஆனால், இன்று வெளியிட்டுள்ள அமைச்சரவையின் முடிவு,  சமச்சீர் கல்வியை கைவிட்டு, இது தொடர்பாக வல்லுனர் குழு அமைப்பது என்பதே அது. சமச்சீர் கல்வி என்பது என்ன ?

தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்ஈ என்று ஐந்து வகையான பாடத்திட்டங்கள் உள்ளன. இந்த பாடத்திட்டங்களால், பல ஆண்டுகளாக ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தன. மேலும், சமுதாயத்தில், மாணவர்கள் மத்தியில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி வந்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை இந்த கல்வி முறைகள் ஊக்கப் படுத்தியும் வந்தன.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14ம் பிரிவு அனைவரும் சமம் என்று கூறினாலும், சாதி, சமயம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் காரணமாக, பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் தரமான கல்வியையும், பணமில்லாத ஒடுக்கப் பட்ட மக்களின் பிள்ளைகள், தரங்குறைந்த கல்வியையும் பெறும் சூழல் நிலவி வந்தது.

இந்தியா போன்ற ஏற்றத் தாழ்வு உள்ள நாட்டில் சமச்சீர் கல்வி என்பது அவசியத் தேவையாகும்.

கருணாநிதி அரசு செய்த ஒரு சில நல்ல திட்டங்களில் ஒன்று இந்த சமச்சீர் கல்வி முறை. செப்டம்பர் 2006ல் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முத்துக் குமரன் தலைமையில் ஒன்பது உறுப்பினர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, இக்கல்வி முறையில் உள்ள குறைகளை ஆராய்ந்து பரிந்துரை அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில், முத்துக்குமரன் கமிட்டி, தனது அறிக்கையை ஜுலை 2007ல் அளித்தது. ஒரே விதமான பாடத்திட்டம், ஒரே அளவு கோல்கொண்ட மதிப்பெண்கள், ஒரே விதமானப் பொதுத்தேர்வு என்பதுதான் முத்துக்குமரன் குழு அறிக்கை பரிந்துரைத்த சமச்சீர் கல்வியின் அடிப்படை அம்சமாகும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மாதம் 10 ஆயிரம் கட்டணம் வாங்கும் பணக்கார பள்ளியில் படிக்கும் மாணவனும், சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் படிக்கும் ரிக்ஷா இழுப்பவரின் மகனும் ஒரே பாடத்தைப் படிப்பார்கள். இந்த சமச்சீர் கல்வி முறை ஏற்றத் தாழ்வுகளை முற்றிலும் ஒழிக்காவிட்டாலும், ஓரளவுக்கு சமன் செய்யும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

அந்தக் கமிட்டியும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிக்கையை அளிக்கவில்லை. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் உள்பட கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர்களிடம் கருத்துக்களை கேட்டபிறகுதான் சமச்சீர் கல்வியை கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய திட்டம் குறித்து இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

4 பாடத்திட்டங்களால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கும் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுவது அவசியம் என்பதை அந்தக் குழு வலியுறுத்தியது. வெவ்வேறு பாடத்திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது பிரச்சினை உருவாகிறது. உயர்கல்வியை சிலர் பின்பற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவேதான், எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் அதன்மூலம் மாணவர்களிடையே உள்ள வேறுபாட்டை தவிர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், ஒவ்வொரு கல்வி திட்டத்திலும் உள்ள உயர்ந்த கல்வி முறையை சமச்சீர் கல்வியில் அரசு சேர்த்துள்ளது. அதுமட்டுமல்ல மத்திய கல்வி திட்டம், என்.சி.இ.ஆர்.டி. கல்வி திட்டம் போன்றவற்றிலும் இருந்து பாடத்திட்டம் எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறையால் மாணவர்களிடையே வேற்றுமை விலகி சமூகநீதி ஏற்படும். புத்தக சுமை பெருமளவில் குறையும்.
இந்த அறிக்கையை செயல்படுத்த, கருணாநிதி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இதற்கான பாடப்புத்தகங்களை உருவாக்க மேலும் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளின் படி, 9 கோடி புத்தகங்கள் தயாரிக்கப் பட்டு, தமிழகம் முழுக்க விநியோகிக்கப் பட்டு விட்டன. இந்தப் பாடப்புத்தகங்களில் ஒரு குறை காண வேண்டும் என்றால், கருணாநிதியைப் பற்றி பாடம் உள்ளது. அந்தப் பாடத்தை மட்டும் நீக்கினால் போதாதா ? மேலும் நீக்குவது ஒரு பெரிய சிரமமா என்ன ? அத்தனை பாடப் புத்தகங்களும் விநியோகம் செய்து முடிக்கப் படுவதற்கு முன்பே, இப்பாடப் புத்தகங்கள் இணைய தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதிக்கப் பட்டது.

இந்தப் பாடப்புத்தகங்களை இணைய தளத்தில் தரவிறக்கம் செய்த 10ம் வகுப்பு மாணவர்கள், கடந்த ஒரு மாதமாக கோடை விடுமுறையில் இந்தப் பாடங்களை படிக்கத் தொடங்கி விட்டார்கள். பல பள்ளிகளில், கோடை விடுமுறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றி, தனியார் பதிப்பகத்தினர், கைடுகள் என்று அழைக்கப் படும், நூல்களை லட்சக் கணக்கில் அச்சடித்து விற்பனை செய்யத் தொடங்கி விட்டனர்.

இந்த சமச்சீர் பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் தொடங்கப் பட உள்ளன.
இத்தனை ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்ட நிலையில் ஜெயலலிதா இன்று சமச்சீர் கல்வி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கல்வியாளரும், கல்வி சீரமைப்புக்காக தொடர்ந்து போராடி வருபவரும், இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருப்பவருமான ப்ரின்ஸ் கஜேந்திர பாபு பேசினார்.
“அமைச்சரவையின் முடிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமான முடிவு இது. கல்வியாளர் அடங்கிய வல்லுனர் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையை, அரசு குப்பையில் போட்டுள்ளது வேதனையானது. இப்போது உள்ள பாடத் திட்டத்தில் தவறுகள் இருக்கலாம். அந்தக் தவறுகளுக்கு திருத்தத்தை அச்சடித்து அனுப்புவதில் சிரமமே இருக்காது. மேலும் சீர் செய்ய வேண்டும் என்று அரசு கருதினால், அடுத்த ஆண்டு பாடப் புத்தகங்களை தாராளமாக மாற்றலாமே.. இந்த சமச்சீர் கல்வியை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற, மெட்ரிகுலேஷன் லாபியினர் மகிழும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இது வெறும் பண நட்டம், பொருளாதாரம் மட்டும் சம்பந்தப்பட்ட முடிவு அல்ல. மாணவர்களின் உளவியல் சம்பந்தப் பட்டது. இரண்டு மாதகாலமாக 10ம் வகுப்பு பாடத்தை படித்து வரும் மாணவனுக்கு, புதிய பாடம் என்றால் எப்படி இருக்கும் ? இது மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை தரும். ஜெயலலிதா அரசு, பெருந்தன்மையோடு, இந்த முடிவை மாற்றும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

குறிப்பிட்ட தேதியில் கட்டாய ஹெல்மெட் என்று உத்தரவு வந்த போது, உண்மையோ இல்லையோ, கருணாநிதி அரசு ஹெல்மெட் தயாரிப்பாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்று விட்ட என்று அப்போது பேச்சு எழுந்தது.

இப்போதும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் மெட்ரிகுலேஷன் லாபியிடமிருந்து லஞ்சம் பெற்றுத் தான் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டு எழுவதற்கான முகாந்திரத்தை ஜெயலலிதாவின் இந்த முடிவு ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலேயே இருந்தாலும், அது எழுவதை தவிர்க்க முடியாது.

இன்று  பேசிய நண்பர், “தலைமைச் செயலகம் புதிய கட்டிடத்தில் இருந்தாலும், பழைய கட்டிடத்தில் இருந்தாலும் என்னை பாதிக்கப் போவதில்லை. ஆனால் எனது இரண்டு மகள்களுக்கும் 750 ரூபாயில் புத்தகம் வாங்கி முடித்திருப்பேன். இப்போது, என் மகள்கள் படிக்கும் கொள்ளைக்காரப் பள்ளியில் புத்தக விலையாக 3000 ரூபாய் என்று சொன்னால், என்னால் என்ன செய்ய முடியும் ?” என்று கேட்டார்.

இதுதான் இன்றைய அத்தனை பெற்றோரின் நிலையும். மிக மிக தவறான முடிவை எடுத்திருக்கிறார் செல்வி ஜெயலலிதா.

கருணாநிதி அரசு எடுத்த எல்லா முடிவுகளுமே தவறு என்று அதை மாற்ற ஜெயலலிதா முயல்வார் என்றால், மக்களின் கடும் அதிருப்தியை சந்திக்க நேரிடும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அலசி ஆராயாமல் எடுக்கப் படும் முடிவுகள் ஜெயலலிதாவுக்கு மிகுந்த கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்.

கருணாநிதி போல, செய்யும் தவறுகளுக்கு மேற்குவங்கத்தை பாருங்கள், பீஹாரைப் பாருங்கள், ஆந்திராவைப் பாருங்கள் என்று சப்பைக் கட்டு கட்டாமல், தவறை உணர்ந்து திருத்தி இந்த முடிவை மாற்றுங்கள். இதனால், உங்கள் புகழுக்கு எந்த பங்கமும் வந்து விடாது. முதல் கோணல் முற்றும் கோணலோ என்று எங்களை அஞ்ச வைத்து விடாதீர்கள்.

No comments: