14 May 2011

15 ஆண்டுக்கு பின் தி.மு.க., கோட்டை தகர்ப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டசபை தொகுதியை கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.கடந்த 91ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அலையில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டி.சோமசுந்தரம் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 96ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.டி.சோமசுந்தரத்தையும், 2001 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்மோகனையும், கடந்த 2006 தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் ரெங்கசாமியையும் வென்று தி.மு.க., வேட்பாளர் உபயதுல்லா ஹாட்ரிக் சாதனை படைத்தார்.தொடர்ந்து, இம்முறை அ.தி.மு.க., சார்பில் ரெங்கசாமியும், தி.மு.க., சார்பில் உபயதுல்லாவும் மீண்டும் களமிறக்கப்பட்டனர்.

தொகுதி வரையறையில் தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்த யூனியனில் பல பகுதிகள் நீக்கப்பட்டு, புதிதாக ஏழு பஞ்சாயத்துக்கள் மட்டும் சேர்க்கப்பட்டது.

இம்முறை எப்படியும் தஞ்சையை கைப்பற்றியே தீர வேண்டும் என வெறியுடன் அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு பணியாற்றினர். குறிப்பாக அ.தி.மு.க., வேட்பாளர் ரெங்கசாமியின் எளிய அணுகுமுறை மற்றும் கடந்த முறை தோல்விடையந்த அனுதாபம் அவருக்கு சாதகமாக அமைந்தது. மேலும், கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாகவும் அதில் ஐந்தாண்டுகள் அமைச்சராகவும் இருந்த உபயதுல்லா தொகுதிக்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை

மேலும், தஞ்சை சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலம், பழைய பஸ் ஸ்டாண்ட் சுரங்கப்பாதை ஆகியவை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் தி.மு.க.,வினரின் சுயலாபத்துக்காக அத்திட்டங்கள் கைவிடப்பட்டது. மற்றும் நகர பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட செய்து தராதது ஆகிய தி.மு.க., மீது குற்றஞ்சாட்டி செய்யப்பட்ட பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. தி.மு.க.,வில் நிலவிய உட்கட்சி பூசல், உள்ளடி வேலை ஆகியவை அ.தி.மு.க.,வின் வேகத்தை அதிகப்படுத்தியது.

அதேபோல் கூட்டணிக்கட்சியான தே.மு.தி.க.,வின் ஆதரவும் தி.மு.க.,வின் கோட்டையான தஞ்சை தொகுதியை தகர்க்க உதவியது. 15 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை கைப்பற்றிய பெருமையுடன் அ.தி.மு.க.,வினர் கம்பீரமாக உலாவருகின்றனர். தி.மு.க.,வின் சிட்டிங் அமைச்சர் மற்றும் அசைக்க முடியாத தி.மு.க., வின் கோட்டை என கருதப்பட்ட தஞ்சையை கைப்பற்றியதன் மூலம் ரெங்கசாமி மாண்புமிகு ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

No comments: