11 May 2011

விக்கிலீக்ஸ் அசாஞ்சுக்கு சிட்னி அமைதி விருது.

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய நாட்டின் மிக உயர்ந்த உலக விருதான, தங்க பதக்கத்துடன் கூடிய "சிட்னி அமைதி விருது' விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய விருதாக கருதப்படுகிறது.
மனித உரிமைகள் பாதுகாப்பு, உலக அமைதியை பல்வேறு வழிகளில் நிலைநாட்டுதல், தத்துவம் மற்றும் கொள்கை அடிப்படையில் அகிம்சையை நிலைநாட்டல் ஆகியவற்றுக்காக, ஆஸ்திரேலியாவின் "சிட்னி அமைதி அறக்கட்டளை' ஆண்டுதோறும், அமைதி விருதினை வழங்கி வருகிறது.அதோடு, மிக அரிதாக, தங்க பதக்கத்துடன் கூடிய அமைதி விருதையும் வழங்கி வருகிறது.

இந்த அறக்கட்டளை துவக்கப்பட்ட 14 ஆண்டுகளில், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஜப்பான் நாட்டு புத்தமதத் தலைவர் டய்சாக்கு இகேடா ஆகிய மூன்று பேர் மட்டுமே, தங்க பதக்கத்துடன் கூடிய அமைதி விருதினை பெற்றுள்ளனர்.மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக, தீரத்துடன் போராடியதற்காக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு தங்க பதக்கத்துடன் கூடிய இந்த அரிய விருது வழங்கப்பட்டது.விருதை ஏற்றுக் கொண்ட அசாஞ்ச், "அமைதி மற்றும் நீதிக்கிடையிலான தொடர்பை இந்த விருது நிரூபித்துள்ளது' என்று பாராட்டியுள்ளார்.

No comments: