29 May 2011

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன்

சென்னை: ஐபிஎல் இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை, 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

2010ம் ஆண்டில் முதல் முறையாக சாம்பியன் ஆன சென்னை அணி தற்போது தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதுடன், ஐபிஎல் பட்டத்தை 2 முறை வென்ற ஒரே அணி என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானே நேற்று நிரம்பி வழிந்தது சென்னை - பெங்களூர் அணிகளின் மோதலைப் பார்க்க. சென்னையில் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்ற சாதனையுடன் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய போட்டியிலும் அபாரமாக ஆடி, ரசிகர்களை விசில் போட வைத்தது.

பிரமாதமான பேட்டிங்கை முதலில் வெளிப்படுத்திய சென்னை, பின்னர் பந்து வீச்சிலும் பெங்களூரை நையப்புடைத்து வெற்றியைத் தட்டிச் சென்றது.

ஒரு அணியின் வெற்றிக்குத் தேவையான அனைத்தும் நேற்று சென்னைக்கு சாதகமாக அமைந்தது. டாஸ் வெல்வது, சிறப்பான ஓப்பனிங், எதிரணியின் முக்கிய வீரர்களை சீக்கிரமே அவட் ஆக்குவது, சிறப்பான பீல்டிங், பந்து வீச்சு- இவை அத்தனையையும் நேற்று சென்னை பெற்றதால் வெற்றி எளிதாக வந்து சேர்ந்தது.

முன்னதாக கேப்டன் டோணி டாஸ் வென்று சென்னை முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதையடுத்து முரளி விஜய்யும், மைக்கேல் ஹஸ்ஸியும் பேட்டிங்கைத் தொடங்கினர்.

இருவரும் சரவெடியாக மாறி சரமாரியாக அடித்து நொறுக்கினர். குறிப்பாக விஜய்யின் ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது. படு துரிதமாக ஆடிய இருவரும் சென்னையின் ரன் விகிதத்தை எகிறச் செய்தனர். இருவரையும் பிரிக்க கடுமையாக முயன்றது பெங்களூர். ஆனால் 15 ஓவர்கள் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த தொடரில் மிகப் பெரிய அளவில் விளையாடாத முரளி விஜய் நேற்று மொத்தமாக வைத்து சாத்தி எடுத்து விட்டார். கூடவே மைக் ஹஸ்ஸியும் பிரமாதப்படுத்த பெங்களூர் சுருண்டு போனது.

இருவரும் சேர்ந்து 159 ரன்களைக் குவித்து சென்னையின் நிலையை வலுவாக்கி விட்டனர். 14 ஓவர்களில் இவர்கள் இருவரும் ஒரு தவறான ஷாட் கூட ஆடவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரியது 10வது ஓவில்தான் விஜய் ஒரு தவறான ஷாட்டை ஆடினார். இருந்தும் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார்.

இருவரும் ஆளுக்கு ஒரு அரை சதம் போட்டனர். விஜய் 95 ரன்களில் இருந்தபோது சதத்தை நழுவ விட்டு அவுட் ஆனார். அவருக்கு முன்னதாக 63 ரன்களில் ஹஸ்ஸி ஆட்டமிழந்தார். இருப்பினும் அணி அதற்குள் நல்ல நிலையை எட்டியிருந்தது.

கேப்டன் டோணி தன் பங்குக்கு 22 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்தவர்கள் சரிவர ஆடாததால் சென்னை அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டும் நிலை நழுவிப் போனது. பிரேவோ கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸர்தான் சென்னை அணியின் ஸ்கோரை 200ஐத் தாண்டி கொண்டு செல்ல உதவியது.

பின்னர் பெங்களூர் ஆட வந்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களைக் குவித்து ஓய்ந்த சென்னைக்கு பதிலடி தருவார் கெய்ல் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை டக் அவுட் செய்து அவுட்டாக்கி ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார் ஓப்பனிங் பவுலிங் செய்த அஸ்வின்.

அதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்க் அகர்வாலையும் அவர் போல்டு ஆக்கி அனுப்ப பெங்களூர் தடுமாற ஆரம்பித்து விட்டது. பின்னர் சுரேஷ் அஸ்வினும், ஜகாதியும் சேர்ந்து தங்களது பந்து வீச்சால் பெங்களூரை திக்குமுக்காட வைத்தனர்.

ஏப் டிவில்லியர்ஸை ஜகாதி 18 ரன்களுக்கு அவுட்டாக்க, போமர்பேக்கையும் அவரே 3 ரன்களில் வெளியேற்றி சென்னையின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி விட்டார்.

மறுபக்கம் அடித்து ஆட முயன்று வந்த விராத் கோலியை சுரேஷ் ரெய்னா எல்பிடபிள்யூ செய்து பெங்களூர் அணியின் கதையை கிட்டத்தட்டமுடித்து விட்டார்.

ஆனால் மனோஜ் திவாரிமட்டும் சற்று சமாளித்து ஆடி வந்தார். 34 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 42 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஆனால் மறு முனையில்எந்த வீரரும் நிலைக்கவில்லை என்பதால் திவாரியின் போராட்டம் வீணாகிப் போனது.

கடைசி நேரத்தில் ஜாகிர்கான் 21 பந்துகளில் 21 ரன்களை எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். ஆனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த பெங்களூரால் 147 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அஸ்வின் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஜகாதி 2 விக்கெட்களைக் கைப்பற்ற, ரெய்னா, பிரேவோ, போலிஞ்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

2வது முறையாக சாம்பியன்

சென்னை அணி 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது. மேலும், இந்த சாதனையைச் செய்த முதல் அணியாகவும் திகழ்கிறது.

இதுவரை நடந்துள்ள நான்கு ஐபிஎல் தொடர்களில் 3 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை மட்டுமே. அதில் இரண்டு முறை சாம்பியனாகி தனது ஆணித்தரமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

No comments: