24 May 2011

வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆட்சியாக இருக்கும் : கூட்டணி கட்சி தலைவர்கள் பேட்டி

சென்னை : "ஆட்சியின் துவக்கத்திலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதால், ஐந்தாண்டுகள் சிறப்பான ஆட்சியாக இருக்கும்' என, அ.தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் கூறினர். தமிழக 14வது சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. நண்பகல் 12.30 மணிக்கு கூட்டம் துவங்கி, மாலை 4 மணிக்கு முடிந்தது. கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட நான்கு எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கவில்லை.

கூட்டத்திற்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தனித்தனியே வந்தனர். தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தோளில் கட்சி துண்டு அணிந்து விஜயகாந்த் தலைமையில், ஒரே நேரத்தில் சபைக்கு வந்தனர். எம்.எல்.ஏ.,க்கள் வாயில் வழியே வந்த விஜயகாந்த் போகும் போது, எதிர்க்கட்சி தலைவர் வாயில் வழியே சென்றார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஒன்றாக சபைக்கு வந்தனர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப், கோபிநாத், என்.ஆர்.ரங்கராஜன் ஆகியோர் ஒன்றாக வந்தனர். பின், பெண் எம்.எல்.ஏ., விஜயதாரணி வந்தார்.


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஜவாஹிருல்லா, அஸ்லாம் பாட்சா ஒன்றாகவும், இதேபோல் சமத்துவ மக்கள் கட்சியில் சரத்குமார், எர்ணாவூர் நாராயணன் ஒன்றாகவும் வந்தனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த கூட்டணி கட்சி தலைவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.


ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): 30 ஆண்டுகளுக்கு பின், முதன்முதலில் சிறுபான்மை கட்சியான நாங்கள், சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளோம். எங்கள் தொகுதிக்கும், தமிழக மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் தேவையான கோரிக்கைகளை சபையில் வலியுறுத்துவோம். இனி தமிழக மீனவர்கள் ஒருவர் கூட இலங்கை படையால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க சபையில் வலியுறுத்துவோம். ஆட்சியின் துவக்கம் நன்றாக உள்ளதால், இந்தியாவில் வளர்ச்சி பெற்ற முதல் மாநிலமாக தமிழகம் மாறும். இதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி): அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக துவங்கியுள்ளது. தென்காசி, நாங்குனேரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்; ஆரோக்கியமான ஆட்சியாக இருக்கும். தொகுதி மக்களுக்காகவும், தமிழக மக்களின் பிரச்னைளை தீர்க்கவும் சபையில் குரல் கொடுப்போம்.


கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில், ஏழு திட்டங்களை பதவியேற்ற முதல் நாளிலேயே முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அனைத்து வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்பட்டு, ஐந்தாண்டுகளும் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் ஆட்சியாக இது அமையும்.


தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை): தமிழக மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி சிறப்பாக துவங்கியுள்ளது. இந்த ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் நல்ல பயன்களும், நலத்திட்டங்களும் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: