13 May 2011

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி!!!


Kanimozhiசென்னை: தி்முக மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அக்கட்சியை காங்கிரஸ் மேலிடம் கைவிடும் சூழல் வலுத்துள்ளது. இதனால் நாளை சிபிஐ கோர்ட்டில் ஆஜராகவுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு அனுப்பப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உறவு கசந்து வெகு நாட்களாகிறது. இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு இரு தரப்பும் பல்வேறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து பூசல் பெரிதாகாமல் கட்டுக்கோப்புடன் இருந்து வந்தன.

இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவை மிகக் கடுமையாகவே மிரட்டி வந்தது காங்கிரஸ். அதை வைத்து மிரட்டித்தான் 63 சீட்களை அது திமுகவிடமிருந்து பெற்றுப் போட்டியிட்டு இப்போது கேவலமான தோல்வியடைநதுள்ளது.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியை இழந்துள்ளதால், காங்கிரஸின் நிலையும் அப்படியே உல்டாவாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அது திமுகவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இந்த வழக்கில் டெல்லி சிபிஐ கோர்ட்டில் கனிமொழி ஆஜராக வேண்டும். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி அறிவிக்கவுள்ளார். அதில் கனிமொழிக்குப் பாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் உடனடியாக சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.

சிபிஐ இந்த வழக்கில் சுதந்திரமாக செயல்படுவதாக கூறப்பட்டாலும், திமுக தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றே ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டிருக்கிறது. எனவே திமுகவின் தோல்வியால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், தற்போது திமுகவுக்கு எதிராக திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழியை சிறையில் அடைக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரையும் கூட குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க காங்கிரஸ் முயலலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: