டெல்லி: இந்தியாவில் அமெரிக்க விசா மோசடியில் ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத் தான் தலைமையிடமாக விளங்குவதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
அமெரிக்காவிற்கான போலி விசா தடுப்பு மையம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த மையம் 2009ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் விசா மோசடியில் ஹைதராபாத்துக்கு அடுத்தபடியாக குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன. போலி ஆவணங்களை தாக்கல் செய்து விசா பெற முயற்சிப்போரின் எண்ணிக்கையில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் கிடைத்த இந்த 'அனுபவத்தை' வைத்து உலகம் முழுவதுமே மோசடியாக விசா பெற முயல்வோரைத் தடுப்பதில் அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.
உலகில் மிக 'பிஸியான 'அமெரிக்கத் தூதரகங்களில் இந்தியத் தூதரங்களும் அடக்கம். 2008ம் ஆண்டில் மட்டும் 7.8 லட்சம் விசா விண்ணப்பங்களை இந்தத் தூதரகங்கள் பெற்றன. அதில் 3,083 பேர் மோசடி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பி1, பி2 விசா பெற மோசடி ஆவணங்கள் தருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. போலியான 'எக்ஸ்பீரியன்ஸ்' கடிதங்களைத் தருவது, உறவினர்களின் போலியான பாஸ்போர்ட் நகலைத் தருவது, போலியான நிதி ஆதார ஆவணங்களைத் தருவது, போலி 'அபிடவிட்கள்' தருவது ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவில் கல்வி பயில விசா பெற வரும் மாணவர்கள் போலியான வங்கி 'ஸ்டேட்மென்ட்களை' தருவதும், போலியான சொத்துப் பத்திரங்களைத் தருவதும் அதிகமாகி வருகிறது.
கொல்கத்தா தூதரகத்தில் இரு புத்த பிட்சுக்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் திருட்டு பாஸ்போர்ட்தைத் தந்து விசா கோரியதும் நடந்தது. இன்னொரு புத்த பிட்சு தான் சாராத ஒரு புத்த மத மையத்தின் போலி கடிதத்தை உருவாக்கி அதை சமர்பித்தார்.
அமெரிக்காவுக்கு சமையல் வேலைக்கும், சிறிய கூலி வேலைகளுக்கும் செல்ல முயன்ற சிலர் தங்களை பூசாரி என்று கூறிக் கொண்டும், அங்கு கோவில்களில் பணியாற்றச் செல்வதாக ஆவணங்களைத் தந்து விசா கோரினர்.
ஒரே நபரைத் திருமணம் செய்துள்ளதாகக் கூறி பல பெண்கள் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பதும் உண்டு. இந்தப் பெண்களிடம் பல லட்சம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக அழைத்துச் செல்ல அந்த ஆண்கள் முயல்கின்றனர்.
அதே போல திருமணத்தை மறைத்துவிட்டு அல்லது போலியாக திருமணம் செய்து கொண்டவர் காட்டிக் கொண்டு, குழந்தைகளின் வயதை பொய்யாக மாற்றித் தந்து என பல வகையான மோசடி முயற்சிகளும் நடக்கின்றன. இந்த திருமண விவகார மோசடிகளில் முன்னணியில் உள்ளது கேரள மாநிலம் தான்.
ஆனால், பெரும்பாலான போலி ஆவணங்கள் வந்தது ஹைதராபாத்திலிருந்து தான். விசா கோரியவர்களுக்கு 'எக்ஸ்பீரியன்ஸ்' லெட்டர்கள் தந்த 150 ஹைதராபாத் நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தியபோது அதில் 77 நிறுவனங்கள் சந்தேகத்துக்குரியவை என்று தெரியவந்தது.
ஹைதராபாத்திலிருந்து வரும் விசா விண்ணப்பங்களை சென்னை தூதரகம் தீவிரமாக சோதிப்பது தெரியவந்தவுடன் பலர் பெங்களூர் அல்லது புனேவில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் காட்டி மும்பை தூதரகத்தில் விசா பெற முயற்சித்து வருகின்றனர்.
இவ்வாறு விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
No comments:
Post a Comment