சென்னை: தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவாகியுள்ளதால் அரசியல் கட்சிகள் கலக்கமும், குழப்பமும் அடைந்துள்ளன. இந்த அதிக அளவிலான வாக்குப் பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கிட்டத்தட்ட 80 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது அரசியல் கட்சிகளை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. இது நமக்கு பாதகமாக அமையுமோ என்ற கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளுமே குழப்பமடைந்துள்ளன. மாறாக மக்களோ பெரும் உற்சாகமடைந்துள்ளனர். நமது மாநிலமும் அதிக அளவில் வாக்களித்து விட்டதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.
ஆனால் இந்த வாக்குப் பதிவை வைத்து மக்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையே காணப்படுகிறது. காரணம், இதற்கு முந்தைய தேர்தல் வாக்குப் பதிவுகளைப் பார்த்தால் தெரியும்.
கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இதை வைத்து அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று பேசப்பட்டது. ஆனால் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.
அதேபோல 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 59 சதவீத வாக்குகளே பதிவாகின. இதனால் அப்போது திமுக வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் அதிமுக வென்று விட்டது.
தமிழகத்தில் இதுவரை அதிக அளவிலான வாக்குககள் பதிவானது 1967ம் ஆண்டுதான். அப்போது 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. அத்தேர்தலில் முதல் முறையாக திமுக ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தமிழகத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சி என்ற வரலாறும் படைக்கப்பட்டது.
வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின்போதும் ஏதாவது ஒரு அலை வீசும். அனுதாப அலை அல்லது ஆதரவு அலை அல்லது அதிருப்தி அலை என ஏதாவது இருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் அப்படிப்பட்ட அலை எதுவும் பெரிய அளவில் இல்லை. திமுகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை இருப்பதாக கூறப்பட்டாலும் கூட அதைக் காணவே முடியாத அளவுக்குத்தான் நிலைமை இருந்தது.
இந்த நிலையில் இப்படி 80 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது அத்தனை கட்சிகளையும் ஒரு வித பீதியில் ஆழ்த்தியுள்ளன. இது யாருக்கு சாதகமாக முடியும், யாருக்கு பாதகமாக முடியப் போகிறது என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு விடை அறிய மே 13ம் தேதி வரை பொறுத்திருந்தே ஆக வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை வாக்கு சதவீதமும் வெற்றியும்:
1967 - 76.57% (திமுக வெற்றி)
1971 - 72.10% (திமுக வெற்றி)
1977 - 61.58% (அதிமுக வெற்றி)
1980 - 65.42% (அதிமுக வெற்றி)
1984 - 73.47% (அதிமுக வெற்றி)
1989 - 69.69% (திமுக வெற்றி)
1991 - 63.84% (அதிமுக வெற்றி)
1996 - 66.95% (திமுக வெற்றி)
2001 - 59.07% (அதிமுக வெற்றி)
2006 - 70.56% (திமுக வெற்றி)
நேற்றைய தேர்தலில் விஐபி தொகுதிகள் வாக்குப் பதிவு:
முதல்வர் கருணாநிதி, திருவாரூர் - 75%
ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் - 73%
ஸ்டாலின், கொளத்தூர் - 66%
விஜயகாந்த், ரிஷிவந்தியம் - 82%
No comments:
Post a Comment